35 ஆயிரம் கண்கள் பாகிஸ்தானுக்கு எவ்வாறு சென்றது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் - வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் - News View

About Us

About Us

Breaking

Friday, December 10, 2021

35 ஆயிரம் கண்கள் பாகிஸ்தானுக்கு எவ்வாறு சென்றது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் - வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள்

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

35 ஆயிரம் கண்கள் பாகிஸ்தானுக்கு எவ்வாறு சென்றது என்பதை தெளிவுபடுத்த வேண்டுமென அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு நேற்று (10) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் கண்டனப் பேரணியில் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி மற்றும் சமூக சேவகர் தாமோதரம் பிரதீபன் ஆகியோர் இணைந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அஸீஸிடம் மகஜரைக் கையளித்தனர்.

இதன்போது காணாமலாக்கப்பட்ட சங்கத்தலைவி தம்பிராசா செல்வராணி கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 13 வருடங்களாக இந்தப் போராட்டத்தை தொடர்நது வருகின்றோம். பல தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை எதிர்பார்த்து காத்திருந்து நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளனர். எனினும், எமக்கான தீர்வு வழங்கப்படவில்லை.

தற்போதைய ஆட்சியில் கூட பெண்களாகிய எங்களுக்கு விடுதலை இல்லை. சுதந்திரமில்லை. இன்று எமது கணவன்மார்களையும் உறவுகளையும் தொலைத்து 13 வருடங்களாகியும் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து பல தாய்மார்கள் மரணித்துப்போன நிலையிலும் எமக்கான தீர்வு வழங்கப்படவில்லை.
பெண்களாகிய எங்ளுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கின்றதோ எமது உறவுகள் என்று வருகின்றார்களோ அல்லது நியாயமான தீர்வு கிடைக்கின்றதோ அன்றுதான் எமக்கு சுதந்திரம். 

மேலும், உயிருடன் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு எமது என்ன நடந்தது ஐ.நா எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

எமது இந்த அம்பாறை மாவட்டத்தில் 11 வருடங்களாக நாங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

போராட்டக் காலத்தில் கணவனை இழந்த அல்லது உறவுகளை இழந்த இறந்தவர்கள்தான் இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

எம்மோடு போராட்டத்தை நடத்துபவர்கள் தங்களது பிள்ளைகள் தங்களது உறவுகள் தங்களோடு வரவேண்டுமென்று போராடுபவர்கள் எனச்சுட்டிக்காட்டினார்.

குறித்த போராட்டத்தின் போது பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டதுடன், பொதுப் போக்கு வரத்தினையும் சீர்செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment