(நா.தனுஜா)
பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சமவாயச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த அசாத் சாலி குற்றச்சாட்டுக்கள் அனைத்திலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளமையானது அரசியல் ரீதியில் பலம் வாய்ந்தவர்களால் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றமைக்குச் சிறந்த உதாரணமாகும் என்று சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அசாத் சாலியின் வழக்குத் தீர்ப்பானது சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்ற தலைப்பில் சுதந்திர ஊடக இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
அசாத் சாலியினால் வெளியிடப்பட்ட கூற்று தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடையும் வரையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தற்போது அவர் மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது அரசியல் பலமுள்ளவர்களால் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றமைக்கு உதாரணமாகும் என்றே நாம் கருதுகின்றோம்.
அசாத் சாலி மீது பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சமவாயச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றஞ்சுமத்தப்பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி பிணை வழங்கப்படாமையினால் சுமார் 8 மாதங்கள் வரை அவர் சிறையில் இருந்தார்.
கடந்த காலங்களில் சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பலர் அநீதியான முறையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை அவர்களது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் மக்களால் வெளியிடப்படும் கருத்துக்களை அரசாங்கம் செவிமடுக்கவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் அசாத் சாலி கைது செய்யப்பட்டபோது, அது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அசாத் சாலி கைது செய்யப்பட்டமையை உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுடன் தொடர்புபடுத்திப் பேசியிருந்தார்.
இவையனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் இந்நாட்டின் அரசியல்வாதிகள் தம்வசமுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்கின்றமை தெளிவாகப் புலப்படுகின்றது. இத்தகைய நடவடிக்கைகள் எதிர்வரும் காலத்தில் ஜனநாயகத்திற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment