(எம்.மனோசித்ரா)
நாட்டில் பாரதூரமான நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு பிரச்சினையையும் சுமூகமான முறையில் நிர்வாகம் செய்ய முடியாமையின் காரணமாகவே ஆசிரியர்கள், சுகாதார தரப்பினர், பொருட்களின் விலை, விவசாயிகளுக்கான உரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் பங்காளி கட்சியாக சுதந்திர கட்சி காணப்பட்டாலும், மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுமாயின் அதனை தைரியமாக விமர்சிப்பதற்கு நாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கும் இடையில் கொழும்பு 10, டாலி வீதியில் அமைந்துள்ள சுதந்திர கட்சி தலைமையகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் ஒரு பங்காளி கட்சியாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன்போது அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பினை வழங்குவதைப் போலவே, மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் அரசாங்கம் செயற்படுமாயின் அவற்றுக்கு தைரியமாக எதிர்ப்பினையும் வெளிப்படுத்துவோம்.
பி.சி.ஆர். , அன்டிஜன், சீனி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட சகல துறைகளிலும் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. நாட்டில் பாரதூரமான நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
எந்தவொரு பிரச்சினையையும் சுமூகமான முறையில் நிர்வாகம் செய்ய முடியாமையின் காரணமாக ஆசிரியர்கள், சுகாதார தரப்பினர், பொருட்களின் விலை, விவசாயிகளுக்கான உரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இவை தொடர்பில் உரிய முகாமைத்துவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு பாராளுமன்றத்தில் 15 ஆசனங்கள் காணப்படுகின்றன. எனவே இந்த பிரச்சினைகளுக்கான தீர்வினைக் காண்பது தொடர்பில் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாமையினால் ஏற்பட்டுள்ள பிரதிபலன்களை கண்கூடாக காண முடிகிறது.
கடந்த தேர்தல்களில் பங்காளி கட்சிகளின் ஆதரவு கிடைத்திருக்கா விட்டால் தேர்தல் முடிவுகள் சாதகமானதாக இருந்திருக்காது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். எது எவ்வாறிருப்பினும் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.
எமது அரசியல் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு அரசியல் சவால்களையும் எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment