(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கான நட்டஈடு கோரும் செயற்பாடுகள் குறித்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் மூலமாக முன்னெடுக்கப்படுகின்றன. பேச்சுவார்த்தைகள் மூலமாக இதனை தீர்த்துக் கொள்ள முடியவில்லை என்றால் வழக்கு தொடருவோம் என நீதி அமைச்சர் அலி சப்ரி சபையில் அறிவித்தார்.
சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில் இந்த வழக்குகளை இலங்கையில் விசாரிப்பதா அல்லது சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்வதா என்பது குறித்தும் இப்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் (11) வியாழக்கிழமை 27/2 இன் கீழ் சிறப்பு கூற்றொன்றை முன்வைத்த வேளையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் பாதிப்பு மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து சபையில் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் தெரிவிக்கையில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், இயற்கை அனர்த்தம் குறித்து கணிப்பை மேற்கொள்ளவும், மீன்பிடி செயற்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கணிப்பீடு செய்யவும், பொருளாதார தாக்கங்களை கணிப்பீடு செய்யவும், நட்டஈடு பெற்றுக் கொள்ளவும், சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவென வெவ்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள உயரிய தகுதியான நபர்கள் இந்த குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தைகள் மூலமாகவே நிதியை பெற்றுக் கொள்ள முடியும். அதற்காக அவர்கள் வழங்கும் நிதியை பெற்றுக் கொள்ள மாட்டோம், முழுமையாக கணிப்பீடுகளை முன்னெடுத்து முழுமையாக எமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் நட்டம் என்பவற்றை கருத்தில் கொண்டே எமது நட்டஈட்டை அறிவிப்போம். இது மிகப்பெரிய இயற்கை அழிவாகும், எனவே இது குறித்து சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்புகளையும் பெற்று அது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்போது பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள இடைக்கால நட்டஈடும் கப்பலை மீட்க நாம் செலவழித்த பணம் மற்றும் கழிவுகளை அகற்ற எடுத்த நடவடிக்கைள் குறித்ததாகும். சர்வதேச அமைப்புகள், ஆய்வாளர்கள் இதில் எமக்கு முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கியுள்ளனர். அதுமட்டுமல்ல குற்றவியல் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன, அதேபோல் கடல் வளத்திற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடுகளை டிசம்பர் மாதத்திற்குள் அறிவிப்போம்.
பேச்சுவார்த்தைகள் மூலமாக இதனை தீர்த்துக் கொள்ள முடியவில்லை என்றால் வழக்கு தொடருவோம். இந்த வழக்குகளை இலங்கையில் விசாரிப்பதா அல்லது சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்வதா என்பது குறித்தும் இப்போது ஆராயப்பட்டு வருகின்றது என்றார்.
No comments:
Post a Comment