(இராஜதுரை ஹஷான்)
கொவிட் தாக்கத்தை குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் முறைக்கேடான முறையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான தீர்மானம் விவசாயத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினையை இன்னும் இரு மாத காலத்திற்குள் நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொள்ள நேரிடும். அரிசியின் விலை பன்மடங்காக அதிகரிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச செலவுகளை தான் குறைத்துக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் அண்மையில் அவரது சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலி நாட்டில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார். அவருடன் சுமார் 50 பேர் சென்றுள்ளனர் அதற்கு யார் பொறுப்பு கூறுவது?
சுற்றி உள்ளவர்கள் மோசடிகளில் ஈடுபடும்போது ஜனாதிபதி மாத்திரம் நான் அரச செலவுகளை குறைத்துக் கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது.
இரசாயன உரம் தடை செய்யப்பட்டதன் விளைவை தற்போது விவசாயிகள் எதிர்கொள்கிறார்கள். இன்னும் இரண்டு மாதங்களுக்கு பிறகு ஒட்டு மொத்த மக்களும் எதிர்கொள்ள வேண்டும். அரிசி பற்றாக்குறை ஏற்படும்.
இரண்டாம் உலகமகா யுத்தத்தை தொடர்ந்து நாடு பெரும் அழிவை நோக்கி செல்கிறது. விவசாயத்துறையில் தவறான தீர்மானத்தை செயற்படுத்தியதன் காரணமாக முழு விவசாயத்துறையும் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினை குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் அனைத்து விடயங்களையும் மூடி மறைத்துக் கொள்கிறது. தென்னாசிய நாடுகளிலும் கொவிட் தாக்கம் காணப்படுகிறது.
இருப்பினும் அந்நாடுகளில் இங்கு காணப்படும் பிரச்சினைகள் போல் பிரச்சினைகள் காணப்படவில்லை. தவறான பொருளாதார முகாமைத்துவத்தின் காரணமாக இன்று நாடு பல்துறைகளில் பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பயனற்ற அபிவிருத்தி பணிகளின் பிரதிபலனை இன்றும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment