சீனாவில் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கும் மக்கள் - திடீர் பதற்றம் ஏன்? - News View

Breaking

Wednesday, November 3, 2021

சீனாவில் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கும் மக்கள் - திடீர் பதற்றம் ஏன்?

ஒருவேளை அவசர நிலை ஏற்பட்டால் அப்போது பயன்படுத்துவதற்கு தேவையான அளவு அத்தியாவசியப் பொருட்களை சேகரித்து வைத்துக் கொள்ளுமாறு சீன அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆனால் இந்த அறிவிப்பு ஏன் வெளியிடப்பட்டது என்று, அதை வெளியிட்ட சீன வர்த்தக அமைச்சகம் காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.

சீனாவின் பல்வேறு பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பொது முடக்கம் மற்றும் வழக்கத்திற்கு மாறான அதிக மழையால் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதால் தடைப்பட்டுள்ள காய்கறி விநியோகம் ஆகியவற்றுக்கு நடுவே சீன அரசின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

உணவுப் பொருட்களுக்கான விநியோகச் சங்கிலி சீராக இருப்பதையும், உணவுப் பொருட்களின் விலை ஏறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகளுக்கு சீன வர்த்தக அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சீன அரசின் இந்த அறிவிப்புக்கு பிறகு சீன மக்கள் பலரும் பதற்றத்துக்கு உள்ளாகி பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர். ஆனால் இவ்வாறு பயப்படத் தேவையில்லை என்று சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

"இந்தச் செய்தி வெளியான உடனேயே எனக்கு அருகில் இருந்த வயதானவர்கள் பித்துப் பிடித்ததைப் போல் ஆகிவிட்டனர். பதற்றத்தின் காரணமாக சூப்பர் மார்க்கெட்டுகளில் அதிகமான பொருட்களை வாங்கத் தொடங்கி விட்டனர்," என்று சீன சமூக ஊடகமான வெய்போவில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற 'தி எகனாமிக் டெய்லி' எனும் செய்தித்தாள் அரசின் அறிவிப்பு காரணமாக பதற்றமடைய வேண்டாம் என்றும் தங்களது பகுதியில் ஒருவேளை பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டால் அதற்கு மக்களைத் தயார் படுத்துவதற்காகவே இவ்வாறான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான அறிவிப்புகள் அரசால் வெளியிடப்படுவது ஒன்றும் புதிதல்ல என்று 'த பீப்பிள்ஸ் டெய்லி' ஊடகம் தெரிவிக்கிறது.

ஆனால் காய்கறிகளின் விலை ஏற்றம் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றிற்கு நடுவே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்றும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

குளிர் காலம் நெருங்க நெருங்க ஆண்டுதோறும் சீனாவில் உணவுப் பொருட்களின் விலைவாசி அதிகரிக்கும். ஆனால் சமீப வாரங்களில் மிகவும் மோசமான வானிலை நிலவி வருவதன் காரணமாக சீனாவில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.

வரும் பெப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு முன்பு சீனாவிலுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாக்க வேண்டுமென்ற இலக்குடன் சீன அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

திங்களன்று சீனாவில் 92 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஷாங்காயில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுது போக்கு பூங்காவுக்கு வந்துவிட்டு வீடு திரும்பிய ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பது தெரிய வந்த பின்பு, டிஸ்னிலேண்ட் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சீனாவின் பல பகுதிகளில் நிலக்கரி பற்றாக்குறையால் கடுமையான மின் வெட்டு நிலவுகிறது. சீனாவில் உள்ள பல பெட்ரோல் நிலையங்கள் டீசலை குறிப்பிட்ட அளவிலேயே மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றன.

குறைந்த டீசல் விநியோகம் மற்றும் அதிகரித்து வரும் விலை உயர்வால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் அரசின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment