மக்கள் பயனடையும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமையவில்லை : எமது யோசனைகளை அரச தலைவர்கள் கவனம் செலுத்தும் விதம் கேள்விக்குறியே - திஸ்ஸ விதாரண - News View

About Us

About Us

Breaking

Sunday, November 14, 2021

மக்கள் பயனடையும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமையவில்லை : எமது யோசனைகளை அரச தலைவர்கள் கவனம் செலுத்தும் விதம் கேள்விக்குறியே - திஸ்ஸ விதாரண

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கம், வாழ்க்கை செலவுகள் அதிகரித்தல் உள்ளிட்ட காரணிகளினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பயனடையும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அமையவில்லை. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கட்சி சார்பில் யோசனை முன்வைத்தோம் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

லங்கா சமசமாஜக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி பொய்யானதாகும். அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி அரசாங்கத்தை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு கூட்டணியின் பங்காளி கட்சி உறுப்பினர்களுக்கு உண்டு எனவும் தெரிவித்தார்.

பாராளுன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் உள்ளடக்கங்கள் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொவிட் தாக்கத்தினாலும், வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பினாலும் நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளார்கள். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்க பயனடையும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமையவில்லை என குறிப்பிட வேண்டும்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்க வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சி சார்பில் யோசனை முன்வைத்தோம். எமது யோசனைகள் தொடர்பில் அரச தலைவர்கள் கவனம் செலுத்தும் விதம் கேள்விக்குறியது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அமைச்சு மட்டத்திலாவது நிவாரணம் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துளோம்.

அரசாங்கத்தில் இருந்து லங்கா சமசமாஜ கட்சி வெளியேறுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கு உண்டு.

அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment