இதே அரசாங்கம் தொடர்ந்தால் மக்கள் பஞ்சத்தால் இறக்க வேண்டிய நிலைமையே ஏற்படும் : குமார வெல்கம - News View

Breaking

Friday, November 5, 2021

இதே அரசாங்கம் தொடர்ந்தால் மக்கள் பஞ்சத்தால் இறக்க வேண்டிய நிலைமையே ஏற்படும் : குமார வெல்கம

(எம்.மனோசித்ரா)

அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றோரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளது. ராஜபக்ஷக்களுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது. இதே அரசாங்கம் தொடர்ந்தும் காணப்படுமாயின் மக்கள் பஞ்சத்தால் இறக்க வேண்டிய நிலைமையே ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றோருக்கு அரசாங்கத்திற்குள்ளேயே இருந்து கொண்டு அதனை வீழ்த்த முடியாது. காரணம் கோட்டாபய ராஜபக்ஷ யார் என்பதை தேர்தலுக்கு முன்னதாகவே நான் தெரிவித்துள்ளேன். அவ்வாறிருக்கையில் இவர்கள் நினைப்பதை அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு சாதிக்க முடியாது.

தற்போது இவர்களுக்குள்ள ஒரே மாற்று வழி அரசாங்கத்திலிருந்து வெளியேறுதலாகும். இவர்கள் மாத்திரமின்றி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 14 உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும். அவ்வாறில்லை எனில் இவர்களின் செயற்பாடுகளை நாடகம் என்றே மக்கள் கூறுவர்.

தற்போது நாட்டை பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர, அமைச்சைப் பற்றி மாத்திரம் சிந்தித்துக் கொண்டிருக்கக் கூடாது. அவ்வாறில்லை எனில் எதிர்கால சந்ததியினருக்கு நாடு எஞ்சாது.

நாம் எவ்வாறான தவறுகளை செய்திருந்தாலும், தவறான முடிவுகளுக்கு ஆதரவளித்திருந்தாலும் எதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த நாட்டை ஸ்தாபித்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தற்போது எமக்கிருக்கிறது.

அவ்வாறு சிறந்த நாட்டை ஸ்தாபிப்பதற்காக அரசாங்கத்தை விட்டு வெளியேறி உரிய தீர்மானம் எடுக்க வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளது.

இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியிலிருக்குமாயின் மக்கள் பஞ்சத்தால் உயிரிழக்க வேண்டிய நிலைமையே ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment