பருவநிலை மாநாடு : காடழிப்பு ஒப்பந்தம் நியாயமற்றது என விமர்சித்த இந்தோனேஷிய அமைச்சர் - கையெழுத்திட்ட ஜனாதிபதி - News View

Breaking

Friday, November 5, 2021

பருவநிலை மாநாடு : காடழிப்பு ஒப்பந்தம் நியாயமற்றது என விமர்சித்த இந்தோனேஷிய அமைச்சர் - கையெழுத்திட்ட ஜனாதிபதி

2030ஆம் ஆண்டுக்குள் காடழிப்பை நிறுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் உள்ள சட்ட திட்டங்களை இந்தோனேஷியா விமர்சித்துள்ளது. மேலும் அச்சட்ட திட்டங்களை கடைபிடிக்க முடியாமல் போகலாம் எனவும் இந்தோனேஷியா கூறியுள்ளது.

"எங்களால் செய்ய முடியாததை அதிகாரிகளால் உறுதியளிக்க முடியாது" என இந்தோனேஷியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் சிடி நுர்பயா பாகர் (Siti Nurbaya Bakar) கூறினார்.

2030ஆம் ஆண்டுக்குள் காடழிப்பை முழுமையாக கைவிட இந்தோனேஷியாவை கட்டாயப்படுத்துவது முற்றிலும் நியாயமற்றது என்று அவர் கூறினார்.

காடழிப்பு ஒப்பந்தத்தில் இந்தோனேஷியா ஜனாதிபதி ஜோகோ விடோடோ கையெழுத்திட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேஷியாவுக்கு வளர்ச்சிதான் பிரதானமாக இருந்து வந்துள்ளது என்று கூறினார் அமைச்சர் சிடி நுர்பயா.

காடழிப்பு ஒப்பந்தத்துக்கு 100 க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் ஒப்புதலளித்தனர், இந்த ஒப்பந்தம் கடந்த திங்கட்கிழமை ஐநாவின் சிஓபி 26 பருவநிலை மாநாட்டில் அறிவிக்கப்பட்ட முதல் பெரிய அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

காடழிப்பு ஒப்பந்தம் 2030ஆம் ஆண்டுக்குள் காடழிப்பு நடவடிக்கையை நிறுத்தவும், காடுகளை மீட்கவும் உறுதியளிக்கிறது.

நாட்டின் பரந்துபட்ட இயற்கை வளம், நாட்டு மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் சிடி நுர்பயா ஒரு ஃபேஸ்புக் பதிவில் இந்தோனேஷியா மொழியில் பதிவிட்டுள்ளார்.

புதிய வீதிகளைக் கட்டமைக்க, காடுகளை அழிக்க வேண்டும் என காரணம் கூறியுள்ளார் அமைச்சர் சிடி.
"ஜனாதிபதி ஜோகோவியின் மாபெரும் வளர்ச்சி யுகம், கார்பன் உமிழ்வு அல்லது காடழிப்பு போன்ற காரணங்களால் நிறுத்தப்படக்கூடாது" என்றும் கூறினார். ஜோகோவி என்பது இந்தோனேஷியா ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் செல்லப் பெயர்.

"காடுகள் உட்பட இந்தோனேஷியாவின் இயற்கை வளங்கள், நியாயமாக இருப்பதைத் தாண்டி அதன் நிலைத்தன்மை கொள்கைகளுக்கு உட்பட்டு பயன்பாடுகள் நிர்வகிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

நிபுணர்கள் காடழிப்பு ஒப்பந்தத்தை வரவேற்கின்றனர், ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு காடழிப்பு நடவடிக்கைகளின் வேகத்தைக் குறைக்க செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தோல்வி அடைந்ததையும் குறிப்பிட்டு எச்சரிக்கின்றனர். வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கூறினர்.

புவியை வெப்பமயமாக்கும் கார்பன் வாயுவை மரங்கள் உள்வாங்கிக் கொள்கின்றன. எனவே மரங்களை வெட்டுவது பருவநிலை மாற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கிடையில் காடழிப்பு ஒப்பந்தத்தை, பூஜ்ஜிய காடழிப்பு உறுதிமொழி என்று கூறுவது தவறானது மற்றும் திசைதிருப்பல் என இந்தோனேஷியாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் மஹேந்திர சிரெகர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில் காடழிப்பு நடவடிக்கைகள் குறைந்தாலும், இந்தோனேஷியாவில் பரந்துபட்ட காடுகள் தொடர்ந்து சுருங்கிக் கொண்டே வருகின்றன.

2001ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் முதன்மைக் காடுகள் 9.4 கோடி (94 மில்லியன்) ஹெக்டேர் பரப்பளவில் இருந்தது என குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் என்கிற காடுகளின் நிலபரப்பை கண்காணிக்கும் வலைத்தளம் கூறுகிறது. 2020ஆம் ஆண்டில் இந்தோனேஷியா காடுகளில் நிலப்பகுதி குறைந்தபட்சம் 10 சதவீதமாவது குறைந்துள்ளது.

No comments:

Post a Comment