விண்கல்லில் மோதி உலகைக் காக்கப் போகும் விண்கலம் : நாளை பயணமாகிறது ! - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 23, 2021

விண்கல்லில் மோதி உலகைக் காக்கப் போகும் விண்கலம் : நாளை பயணமாகிறது !

அபாயகரமான விண்கற்களை மாற்றுப் பாதையில் தள்ளிவிடுவதற்கு எதிர்காலத்தில் தேவைப்படக்கூடும் தொழில்நுட்பத்தை ஒரு விண்கலம் துவக்கி வைத்துப் பரிசோதிக்க உள்ளது.

நாசாவின் 'டார்ட்' திட்டம், பூமியை நோக்கிவரும் பெரும் விண்கற்களை நிலைப்படுத்துவதற்காக நீண்ட காலமாக இருந்துவரும் திட்ட முன்மொழிவினை மதிப்பீடு செய்யும்.

இந்த விண்கலம் டைமோர்ஃபோஸ் எனும் விண்கல்லுடன் மோதி, அதன் வேகமும் பாதையும் எந்த அளவு மாற்றப்பட முடியும் என்பதைச் சோதிக்கும்.

ஒரு சில மீட்டர்கள் குறுக்களவு கொண்ட ஒரு அண்டச் சிதைவு, பூமியோடு மோதினால், அது கண்டம் தழுவிய அழிவினை ஏற்படுத்தும்.

இந்தக் குறிப்பிட்ட விண்கல் பூமிக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்காது என்ற போதும், பூமியைக் காப்பாற்றுவது எப்படி என்று கற்கும் நோக்கத்துடன் ஒரு விண்கல்லை திசைமாற்றும் முதல் முயற்சி இது.

"டார்ட், டைமோர்ஃபோஸ் தன் சுற்றுப்பாதை வட்டத்தை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலத்தை ஒரு சிறு அளவு மாற்ற மட்டுமே செய்யும். ஒரு விண்கல் வெகு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டு விடும் பட்சத்தில், இதுவே போதுமானது," என்கிறார் நாசாவின் கிரகப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகத்திலிருக்கும் கெல்லி ஃபாஸ்ட்.

நாளை புதன்கிழமை 06:20 ஜி.எம்.டி மணிக்கு, டார்ட் விண்கலத்தைச் சுமக்கும் ஃபால்கன் 9 ரொக்கெட், கலிஃபோர்னியாவின் வாண்டென்பெர்க் விண்வெளிப் படைத்தளத்திலிருந்து கிளம்பும்.
நாசா விண்கலம் விண்கல்லின் நிலவில் சென்று மோதும்
விண்கற்கள் சூரியக் குடும்பக் கட்டமைப்பின் எஞ்சிய மூலப்பொருட்கள், இவைகளில் பெரும்பாலானவை பூமிக்கு எந்த அச்சுறுத்தலும் விளைவிக்காதவை. ஆனால், இரண்டும் சந்தித்துக் கொள்ளுமாறு, சூரியனைச் சுற்றும் ஒரு விண்கல்லின் பாதையும் பூமியின் பாதையும் குறுக்கிட்டால், மோதல் நிகழலாம். $325 மில்லியன் (£240 மில்லியன்) மதிப்புள்ள டார்ட் திட்டம், 'பைனரி' என்றழைக்கப்படும், மிக நெருக்கமாக ஒன்றையொன்று சுற்றிவரும் ஒரு ஜோடி பொருட்களைக் குறிவைக்கும். இவ்விரண்டில் அளவில் பெரியதான, டிடிமோஸ் 780 மீட்டர் குறுக்களவு கொண்டது, அதன் சிறிய துணையான டைமோர்ஃபோஸ் 160 மீட்டர் அகலமானது.

டைமோர்ஃபோஸின் அளவுள்ள பொருட்கள் ஒரு அணுகுண்டின் ஆற்றலைவிட பன்மடங்கு ஆற்றலோடு வெடிக்கக் கூடும், இது மக்கள் வசிக்கும் பகுதிகளை அழித்து, பல பத்தாயிரம் பேரைக் கொல்லவும் கூடும். 300 மீட்டரோ அதற்கு அதிகமான அளவோ விட்டம் கொண்ட விண்கற்கள் கண்டம் தழுவிய அழிவினை ஏற்படுத்தக் கூடும், 1 கிலோமீட்டருக்கும் பெரியவை உலகளாவிய பாதிப்புகளை எற்படுத்தும்.

டார்ட் ஏவப்பட்டவுடன், முதலில் அது சூரியனைச் சுற்றிய தனது சொந்த வட்டப் பாதையைப் பின்பற்றி, பூமியின் புவியீர்ப்பு மண்டலத்திலிருந்து வெளியேறும். தொடர்ந்து அது, செப்டெம்பர் 2022 இல், பூமியிலிருந்து 6.7 மில்லியன் மைல் தொலைவில் பைனரியை இடைமறிக்கும்.

டார்ட், "சிறு நிலவான" டைமோர்ஃபோஸின் மீது 15,000mph (6.6km/s) அளவு வேகத்தில் சென்று மோதும். இது, அதன் வேகத்தை ஒரு நொடிக்கு ஒரு மில்லி மீட்டரின் சிறு பகுதியளவுக்குக் குறைக்கும் - இது டிடிமோஸைச் சுற்றிய அதன் பாதையை மாற்றும். இது மிகச்சிறிய அளவிலான மாற்றமே, ஆனால் இது பூமியின் மீது மோதவரும் ஒரு பொருளை அதன் பாதையிலிருந்து தள்ளிவிடுவதற்குப் போதுமானது.
டார்ட்டின் தாக்கம்
"பெரும் விண்கற்களைவிடச் சிறியவை நிறைய உள்ளன, அதனால் பெரும்பாலும் நாம் சந்திக்கக் கூடிய விண்கல் அச்சுறுத்தல் - நாம் அப்படி ஒன்றைச் சந்திக்க வேண்டி வந்தால் - அது அநேகமாக இந்த அளவிலுள்ள ஒரு விண்கல்லின் மூலமாகத்தான் வரும்," என்கிறார் நாசாவில் இந்தத் திட்டத்தின் விஞ்ஞானியான டாம் ஸ்டாட்லர்.

2005 இல் அமெரிக்க நாடாளுமன்றம், பூமிக்கு அருகிலுள்ள விண்கற்களில் 140 மீட்டரினும் (460 அடி) பெரியவற்றில் 90 சதவீதமானவற்றைக் கண்டுபிடித்துக் கண்காணிக்கும்படி நாசாவுக்கு ஆணையிட்டது. இவ்வகையான விண்கற்களில், இப்போதைக்கு பூமியை அச்சுறுத்துபவை எதுவும் அறியப்படவில்லை, ஆனால் இவற்றில் 40% மட்டுமே உண்மையில் கண்டறியப்பட்டுள்ளன.

டார்ட், ட்ரேகோ எனும் கேமராவைச் சுமந்து செல்கிறது, இது இரண்டு விண்கற்களின் படங்களையும் அளித்து, விண்கலம் டைமோர்ஃபோஸுடன் மோதுவதற்கான சரியான பாதையில் செல்ல உதவும்.

தனது இலக்கினைத் தாக்குவதற்கு 10 நாட்கள் முன், இந்த அமெரிக்க விண்கலம், இத்தாலியால் உருவாக்கப்பட்ட லிசியாக்யூப் எனப்படும் ஒரு சிறிய விண்கலத்தைச் செலுத்தும். இந்தச் சிறிய விண்கலம் மோதலின் தாக்கத்தின், அதனால் கிளம்பும் புழுதியின், அதனால் ஏற்படும் பள்ளத்தின், படங்களை பூமிக்கு அனுப்பும்.

டைமோர்ஃபோஸின் பாதை எந்த அளவு மாறும்?
டிடிமோஸைச் சுற்றிய டைமோர்ஃபோஸின் பாதையில் ஏற்படும் மிகச்சிறிய மாற்றத்தை பூமியிலுள்ள தொலைநோக்கிகள் அளவெடுக்கும். டாம் ஸ்டாட்லர் கூறுகிறார்:

"நாம் உண்மையில் அறிந்துகொள்ள விரும்புவது என்னவெனில், நாம் உண்மையிலேயே அந்த விண்கல்லை திசைமாற்றினோமா, எவ்வளவு திறனாக அதைச் செய்தோம்?"

ஒரு பைனரி இத்தகைய பரிசோதனைக்கான கச்சிதமான இயற்கைச் சோதனைக்கூடம். இந்தத் தாக்கம் டிடிமோஸைச் சுற்றிய டைமோர்ஃபோஸின் பாதையை தோராயமாக 1% மாற்றும், இதனை பூமியிலுள்ள தொலைநோக்கிகள் சில வாரங்களிலோ மாதங்களிலோ கண்டறியும்.

இருந்தும், டார்ட் ஒரு தனி விண்கல்லுடன் மோதுமானால், சூரியனைச் சுற்ற அந்த விண்கல் எடுத்துக்கொள்ளும் கால அளவு சற்றேறக்குறைய 0.000006% மாறும், இதை அளவிட பல வருடங்கள் பிடிக்கும்.

இந்த பைனரி மிகச்சிறியது, மிகவும் ஆற்றல்மிக்கத் தொலைநோக்கிகளுக்குக் கூட இது ஒற்றை ஒளிப்புள்ளியாகவே காட்சியளிக்கிறது. ஆனாலும், சுற்றி வருகையில், டைமோர்ஃபோஸ் டிடிமோஸிலிருந்து பிரதிபலிக்கும் ஒளியைச் சற்று மறைக்கிறது, ஒரு சிறிய பொருள் தன்னினும் பெரிய ஒன்றன் பின்னால் செல்லும் போது, இதற்கு எதிரான விளைவு நிகழ்கிறது.

"இப்படி ஒளி மங்குவது எத்தனை முறை நிகழ்கின்றது என்று நம்மால் கணக்கிட முடியும்," என்று விளக்குகிறார் டார்ட்டின் விசாரணை அணித் தலைவர் ஆண்டி ரிவ்கின்: "இப்படித்தான் டைமோர்ஃபோஸ் டிடிமோஸை 11 மணி, 55 நிமிடங்களில் சுற்றி வருகிறது என்று நமக்குத் தெரியும்."

தாக்கத்திற்குப் பிறகு வானியலாளர்கள் மீண்டும் இதனைக் கணக்கிடுவார்கள். "இவை ஒரு குறிப்பிட்ட கால அளவில் அதிக எண்ணிக்கையில் நிகழும் - ஒவ்வொரு 11 மணி 45 நிமிடங்களுக்கு இருமுறை நிகழலாம், அல்லது அது 11 மணி 20 நிமிடங்களாகவும் இருக்கலாம்," என்கிறார் டாக்டர் ரிவ்கின், இவர் மேரிலாண்டின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு இயற்பியல் ஆய்வகத்தைச் சார்ந்தவர்.
நிச்சயமின்மை
டைமோர்ஃபோஸின் உள் வடிவம் தெரியாது என்பதால், அது தாக்கத்திற்கு எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பதில் நிச்சயமற்ற தன்மை இருப்பதாக அவர் கூறினார். டைமோர்ஃபோஸ் தன்னுள்ளே, காலியிடங்கள் கொண்டிருப்பதைவிட, ஒப்பீட்டளவில் திடமாக இருந்தால், அது அதிகளவு சிதைவுகளை உருவாக்கும் - இது அதனை மேலும் வலுவாகத் தள்ளிவிடும்.

அபாயகரமான விண்கல்லை டார்ட் சமாளிக்கும் முறை 'கைனெடிக் இம்பாக்டர் டெக்னிக்' என்று அழைக்கப்படுகிறது. ஆனாலும், வேறு யோசனைகளும் உள்ளன, விண்கல்லை இன்னும் நீண்ட கால இடைவெளியில் மெதுவாக நகர்த்துவது, மற்றும் அதன்மீது ஒரு அணுகுண்டை ஏவுவது உட்பட - இது ஆர்மகெட்டான், டீப் இம்பேக்ட் போன்ற ஹாலிவுட் திரைப்படங்களின் மூலம் பிரபலமான ஒரு விஷயம்.

No comments:

Post a Comment