அரசாங்கத்திற்கு பித்துப் பிடித்துள்ளது - ஹர்ஷன ராஜகருணா - News View

Breaking

Tuesday, November 23, 2021

அரசாங்கத்திற்கு பித்துப் பிடித்துள்ளது - ஹர்ஷன ராஜகருணா

(இராஜதுரை ஹஷான்)

விவசாயத்துறை தொடர்பிலான தீர்மானங்களை யார் எடுப்பது என்ற போட்டி அரசாங்கத்திற்குள் காணப்படுகிறது. ஜனாதிபதியின் தீர்மானங்களையும், விவசாயத்துறை அமைச்சின் தீர்மானங்களையும் விவசாயத்துறை அமைச்சர் அறியவில்லை. முழு அரசாங்கத்திற்கும் பித்து பிடித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் வர்த்தமானி மீள் திரும்பல் (கெசட் ரிவஸ்) அரசாங்கம் என்று ஏளனம் செய்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வாழ்க்கை செலவுகள் தினசரி அதிகரித்துள்ள காரணத்தினால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள் வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன ஆனால் எத்தரப்பினருக்கும் வருவாய் அதிகரிக்கப்படவில்லை.

மரக்கறிகளின் விலையேற்றம் என்றும் இல்லாத வகையில் தற்போது சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன உரம் பிரச்சினை காரணமாக விளைச்சல் குறைவடைந்துள்ளன. அதனால் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

சேதன பசளை திட்டத்தினால் விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சினைகளை தற்போது ஒட்டு மொத்த மக்களும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. விவசாயத்துறை தொடர்பிலான தீர்மானங்களை யார் எடுப்பது என்ற போட்டித்தன்மை அரசாங்கத்திற்குள் காணப்படுகிறது.

தெரிவு செய்யப்பட்ட பயிர்களின் பாவனைக்கு மாத்திரம் இரசாயன உரம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார், இரசாயன உரம் இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படவில்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றில் குறிப்பிடுகிறார்.

2014ஆம் ஆண்டு க்ளைபோசட் கிருமிநாசினி பாவனை மற்றும் வியாபாரம் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அதற்கான வர்த்தமானி அறிவித்தலை கிருமிநாசினிகள் திணைக்கள பதிவாளர் நேற்று முன்தினம் வெளியிட்டார். அவரை பதவி நீக்கியதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று காலை குறிப்பிடுகிறார்.

ஆகவே விவசாயத்துறை தொடர்பிலான தீர்மானங்கள் அரசாங்கத்திற்குள் பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது முழு அரசாங்கத்திற்கும் பித்து பிடித்துள்ளது என்று குறிப்பிட வேண்டும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் தற்போது வர்த்தமானி மீள் திரும்பல் அதாவது கெசட் ரிவஸ் (ஜி.ஆர்) அரசாங்கம் என ஏளனம் செய்கிறார்கள். விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கம் எடுத்த மற்றும் தற்போது முன்னெடுக்கும் தீர்மானங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது

சேதன பசளை திட்டம் வெற்றி பெறாத காரணத்தினால் மரக்கறிகளின் விளைச்சல் வீழ்ச்சியடைந்து விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. கரட், லீக்ஸ், போஞ்சி, கத்தரிக்காய் மற்றும் கறிமிளகாய் ஆகியவற்றின் சில்லறை விலை 500 ரூபாவிற்கும் அதிகமாக காணப்படுகிறது. சேதன பசளை திட்டம் தோல்வி என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment