பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கக்கூடிய வகையில் கருத்துக்களை வெளியிடுவதற்கான சூழலை உருவாக்கித் தாருங்கள் - ஹரினி அமரசூரிய சபாநாயகருக்கு கடிதம் - News View

Breaking

Tuesday, November 23, 2021

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கக்கூடிய வகையில் கருத்துக்களை வெளியிடுவதற்கான சூழலை உருவாக்கித் தாருங்கள் - ஹரினி அமரசூரிய சபாநாயகருக்கு கடிதம்

(நா.தனுஜா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியினால் கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட பாலியல் ரீதியான சில கருத்துக்கள் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்னவை அவமதிக்கும் வகையிலும் வாய் மொழி மூல துஷ்பிரயோகமாகவும் அமைந்திருந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய, 12 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கக்கூடிய வகையில் கருத்துக்களை வெளியிடுவதற்கான சூழலை உருவாக்கித்தருமாறு வலியுறுத்தி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

சபாநாயகருக்கு ஹரினி அமரசூரிய அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு, செலவுத் திட்ட விவாதத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, சக உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தொடர்பில் நடந்துகொண்ட விதத்தை வாய் மொழி மூலமான துஷ்பிரயோகம் என்றே குறிப்பிட முடியும். அவரது வார்த்தைப் பிரயோகங்கள் வன்முறையான விதத்திலும் பாலியல் ரீதியானவையாகவும் அமைந்திருந்தன.

இத்தகைய நடவடிக்கைகள் சக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் அவமதிப்பதாக அமைவதில்லை. மாறாக அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துப் பெண்களையும் அவமதிப்பதாகவே அமையும்.

இலங்கைப் பாராளுமன்றத்தின் மிகக்குறைந்தளவான பெண் பிரதிநித்துவம் தொடர்பில் சர்வதேச சமூகம் விசேட அவதானம் செலுத்தியுள்ள சந்தர்ப்பத்தில், பாராளுமன்றத்தில் நடைபெறும் இத்தகைய சம்பவங்கள் அக்கட்டமைப்பு தொடர்பான பொது அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்புவதற்கு எவ்வகையிலும் உதவப்போவதில்லை. அதுமாத்திரமன்றி இவை பொதுமக்கள் மத்தியில் பாராளுமன்றம் தொடர்பான எதிர்மறையான புரிதல்களையே உருவாக்கும்.

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் செயற்பாட்டை எதிர்ப்பதற்குப் பதிலாக அவரது சகாக்கள் அக்கருத்தை வரவேற்றமை மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

அத்தோடு அவருக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டு, தகாதமுறையில் தொடர்ந்தும் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

எனவே இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு அவசியமான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளும் அதேவேளை, பாராளுமன்றத்தில் வன்முறையானதும் பாலியல் ரீதியானதுமான சொற்பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல என்பதையும் நினைவுறுத்த விரும்புகின்றேன்.

ஆகவே இவ்விடயத்தில் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறும் பட்சத்தில், அது எமது ஜனநாயகக் கட்டமைப்புக்கள் மற்றும் பாரம்பரியங்கள் தொடர்பில் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை மேலும் தகர்ப்பதாகவே அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தி பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டிணைவின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேவும் சபாநாயகருக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment