கப்பல் அகற்றப்பட்ட பின்னர் முழு நட்டஈட்டையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் - ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

About Us

Breaking

Thursday, November 11, 2021

கப்பல் அகற்றப்பட்ட பின்னர் முழு நட்டஈட்டையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் - ரோஹித அபேகுணவர்தன

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

"எக்ஸ்பிரஸ் பேர்ல்" கப்பலை அகற்றும் நடவடிக்கை மற்றும் கப்பலில் உள்ள இரசாயன திரவங்களை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேச அமைப்புகள் ஒத்துழைப்புகளை வழங்கவுள்ளதாகவும், கப்பல் அகற்றப்பட்ட பின்னர் இறுதியான முழு நட்டஈடு குறித்து கணிப்புகளை மேற்கொண்டு அவற்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) 27/2 இன் கீழ் சிறப்பு கூற்றொன்றை முன்வைத்த வேளையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் பாதிப்பு மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து சபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் தெரிவிக்கையில் அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கைக்கு வருகை தந்திருந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இரசாயன திரவம் மற்றும் ஏனைய பொருட்கள் கொண்டுவரப்பட்டமை உண்மையே. ஆனால் இவை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதள்ள. ஏனென்றால் இலங்கை துறைமுகங்கள் மீள் ஏற்றுமதி துறைமுகங்களாகும்.

எனவே மீள் ஏற்றுமதி துறைமுகங்களுக்கு வரும் கப்பல்கள் வேறு நாடுகளுக்கு பயணிக்கும் நாடுகள் என்ற காரணத்தினால் அந்த கப்பல்களில் கொண்டுவரப்படும் பொருட்கள் குறித்தும் எம்மால் கவனம் செலுத்த முடியாது. இதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எவ்வாறு இருப்பினும் தீப்பிடித்த கப்பலின் தீயை கட்டுப்படுத்த எம்மாலான சகல நடவடிக்கையையும் முன்னெடுத்தோம். எனினும் அப்போதைய காலநிலை மோசமாக காணப்பட்ட காரணத்தினால் அனர்த்தத்தை கட்டுப்படுத்த முடியாது போனது.

எனினும் ஆழ்கடலுக்கு கப்பலை இழுத்து செல்ல முயற்சித்த வேளையில் அதனை முன்னெடுக்க முடியாது போனது. எனவே கப்பல் ஆழ்கடலுக்கு கொண்டு செல்லப்படவில்லை. அதேபோல் கடல் வளங்கள் அழிவு குறித்து இப்போதும் கண்காணிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காப்புறுதி செயற்பாடுகள் குறித்து சர்வதேச நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலில் கப்பலில் உள்ள கொள்கலன்களை அகற்றும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அதேபோல் கப்பலில் பாகங்களை அகற்றவும் சர்வதேச நிறுவனங்கள் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றன. இலங்கை மீப்பா நிறுவனமும் இதில் கண்காணிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த செயற்பாடுகளில் மேலும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கான நட்டஈடும் பெற்றுக் கொள்ளப்படும். அது குறித்தும் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், இது குறித்து அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டு 15 கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவரும் இதில் கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதுமட்டுமல்ல, இன்றும் குறித்த கப்பல் நிறுவனத்துடனும், காப்புறுதி நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சட்ட நடவடிக்கைகள் எடுக்காது பேச்சுவார்த்தைகள் மூலமாக நட்டஈடு பெற்றுக் கொள்ளவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இப்போதுவரையில் இடைக்கால நட்டஈடாக 720 பில்லியன் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளன. 328 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகின்றது.

இரண்டாம் கட்ட நட்டஈடு விரைவில் பெற்றுக் கொள்ளப்படும். எனினும் கப்பல் அகற்றப்பட்ட பின்னர் இறுதியான முழு நட்டஈடு குறித்து கணிப்புகளை மேற்கொண்டு அவற்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment