தீர்த்துக் கொள்ள முடியாத நிலையிலேயே வெளியில் வந்து மக்களுடன் கலந்துரையாடுகின்றோம் : விமர்சிப்பதால் அரசாங்கம் பலவீனமடையப் போவதில்லை என்கிறார் தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Friday, November 5, 2021

தீர்த்துக் கொள்ள முடியாத நிலையிலேயே வெளியில் வந்து மக்களுடன் கலந்துரையாடுகின்றோம் : விமர்சிப்பதால் அரசாங்கம் பலவீனமடையப் போவதில்லை என்கிறார் தயாசிறி ஜயசேகர

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கத்துக்குள் இருக்கும் பிரச்சினைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி தீர்த்துக் கொள்ள முடியாத நிலையிலேயே வெளியில் வந்து மக்களுடன் கலந்துரையாடுகின்றோம். இல்லாவிட்டால் அரசாங்கத்தின் தவறுகளுக்கு நாங்களும் பொறுப்புக்கூற வேண்டி வரும். அத்துடன் வெளியில் வந்து அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சிப்பதன் மூலம் அரசாங்கம் பலவீனமடையப் போவதில்லை. மாறாக மேலும் ஜனநாயக ரீதியில் பலப்படும் என ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அரசாங்காத்துக்குள் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான சதித்திட்டம் என அரச தரப்பினர் தெரிவித்து வரும் குற்றச்சாட்டு தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கத்தின் சில விடயங்களை வெளியில் வந்து எமக்கு பேச வேண்டி ஏற்படுகின்றது. அதனால் அரசாங்கத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிப்பதில் எந்த அடிப்படையும் இல்லை.

அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை நாங்கள் உள்ளே இருந்து தொடர்ந்து எடுத்துச் சொல்லியும் அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள முடியாத கட்டத்தில் வெளியில் வந்து மக்களுக்கு தெளிவு படுத்துகின்றோம். இல்லாவிட்டால் நாங்களும் குற்றவாளிகளாக்கப்படுவோம். வெளியில் விமர்சிப்பதன் மூலம் அரசாங்கம் மேலும் ஜனநாயக ரீதியில் பலப்படுகின்றது.

அத்துடன் எமது இந்த நடவடிக்கையின் மூலம் அரசாங்கத்தை பலவீனப்படுத்தவோ அல்லது அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு வேறு சக்தி ஒன்றை அமைப்பதற்கு முயற்சிப்பதாக அர்த்தப்படுவதில்லை. அவ்வாறு நாங்கள் நினைக்கவில்லை.

அரசாங்கம் எதை செய்தாலும் அதனை சரி என தெரிவித்து, அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் என யாரும் நினைத்தால் அது தவறு. அரசாங்கத்தின் பங்காளிகள் என்ற வகையில் அரசாங்கத்தின் தவறுகளை விமர்சிப்பதற்கும் எமக்கு உரிமை இருக்கின்றது. அதன் மூலம் அரசாங்கத்தை பலவீனப்படுத்துவது எமது நோக்கம் அல்ல. அவ்வாறு யாராவது நினைத்தால் அது அவர்களது அரசியல் அறியாமையாகும்.

என்னை பொறுத்தவரை நான் எப்போதும் அரசாங்கத்தை பாதுகாக்கவே செயற்பட்டு வருகின்றேன். பிரச்சினைகள் இருந்தால் அதனை உள்ளுக்குள் இருந்தே தீர்த்துக் கொள்ள முயற்சிக்கின்றேன். முடியாத நிலை ஏற்படும்போது வெளியில் வந்து தெரிவிப்பேன்.

மேலும் அரசாங்கத்தை வெளியில் வந்து விமர்சிப்பவர்களில் ஆரம்பமானவர்கள் நானோ அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச அல்லது வாசுதேவ நாயணக்கரவோ அல்ல. அரசாங்கத்தில் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களே அரசாங்கத்தின் சில தீர்மானங்களை வெளியில் வந்து விமர்சித்திருக்கின்றார்கள்.

குறிப்பாக ஆசிரியர்களின் போராட்டத்தின் போது ஜோசப் ஸ்டாலினை தூக்கிக் கொண்டு சென்றது தவறான செயல் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ் தெரிவித்திருந்தார். அதேபோன்று விதுர விக்ரம ரத்ன அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பல தடவைகள் விமர்சித்திருக்கின்றார். அண்மையில் ஜகத் புஷ்பகுமார மற்றும் அமைச்சர் சரத் வீரசேகர ஆகியேருக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இதுவும் அரசாங்கத்தை விமர்சிப்பதாகவே கருதப்படும்.

தேர்தல் ஒன்றை நடத்தினால் அரசாங்கம் தோல்வியடையும் என ராஜாங்க அமைச்சர் ஷசிந்திர ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். இது தொடர்பில் யாரும் கருத்து தெரிவிக்க முன்வரவில்லை. அவர்களின் கருத்தின் பிரகாரம் இதுவும் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் அறிவிப்பாகும். அதனால் அரசாங்கத்துடன் இருக்கும் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வெளியில் வந்து விமர்சித்தால், அதனை யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்.

ஆனால் அரசாங்கத்தில் இருக்கும் சிறிய கட்சிகள் விமர்சித்தால், அதனை பெரிதுபடுத்தி, பாரிய சதித்திட்டம் மேற்கொள்வதாக சேறுபூச ஆரம்பிக்கின்றார்கள். அதனால் எம்மை விமர்சிப்பவர்களின் நடவடிக்கையை சிறுபிள்ளைத்தனமான செயலாகவே நாங்கள் காண்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment