ஜனாதிபதித் தேர்தலில் ஏமாற்றமடைந்த 69 இலட்சம் மக்களும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் - சஜித் பிரேமதாஸ அறைகூறல் - News View

Breaking

Friday, November 5, 2021

ஜனாதிபதித் தேர்தலில் ஏமாற்றமடைந்த 69 இலட்சம் மக்களும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் - சஜித் பிரேமதாஸ அறைகூறல்

(நா.தனுஜா)

அரிசி இல்லாவிட்டால் மரவள்ளிக்கிழங்கை உண்ணுமாறு அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கூறுகின்றனர். ஆட்சிபீடமேறியவுடன் நாட்டு மக்களின் நலன்களை முழுமையாகப் புறக்கணித்துச் செயற்படுகின்ற தற்போதைய அரசாங்கத்தைத் தோற்கடித்து, மக்களை முன்னிறுத்திய அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. எனவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏமாற்றமடைந்த 69 இலட்சம் மக்களும் அடுத்து வரும் தேர்தலில் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் குருணாகல் மாவட்டத்தின் கல்கமுவ பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரிய மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, அரிசி இல்லாவிட்டால் மரவள்ளிக்கிழங்கை உண்ணுமாறு ஆளுந்தரப்பினர் கூறுகின்றார்கள். ஏற்கனவே நெல்லுற்பத்தியில் சுய தேவைப் பூர்த்தியடைந்திருந்த எமது நாட்டை மரவள்ளி உற்பத்தியினால் தன்னிறைவடையச் செய்வதற்காகவா 69 இலட்சம் மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்தார்கள்? என்று கேள்வியெழுப்ப விரும்புகின்றேன்.

ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் வாக்குகளையும் பொதுத் தேர்தலில் 68 இலட்சம் வாக்குகளையும் பெற்று ஆட்சிபீடமேறிய அரசாங்கம், இப்போது விவசாயிகள், மீனவர்கள், அரச சேவையாளர்கள், கூலித் தொழிலாளர்கள் உள்ளடங்கலாக நாட்டு மக்கள் அனைவரையும் முழுமையாகப் புறக்கணித்திருக்கின்றது.

இவ்வாறு செயற்படும் அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் நல்லதொரு பாடத்தைப் புகட்ட வேண்டும். அதற்கான காலம் விரைவில் உதயமாகும். எதிர்வரக்கூடிய தேர்தல்களில் மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தித் தற்போதைய அரசாங்கத்தைத் தோற்கடிக்க வேண்டும்.

அதேபோன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏமாற்றமடைந்த 69 இலட்சம் மக்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் எப்போதும் திறந்தேயிருக்கும். எனவே எம்முடன் வந்து இணைந்துகொள்ளுமாறு அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

அதனூடாக விவசாயிகள் உள்ளடங்கலாக பொதுமக்களின் நலனை முன்னிறுத்திய மக்கள் மய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

இரசாயன உர இறக்குமதித் தடை காரணமாக உரத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலையில், அதனால் விவசாயிகள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகள் தொடர்பில் இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் கோஷங்களை எழுப்பியதுடன் அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டனம் செய்யும் வகையிலும் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment