பெருந்தோட்ட வீடமைப்பு அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - பஷில் ராஜபக்ஷ - News View

Breaking

Friday, November 12, 2021

பெருந்தோட்ட வீடமைப்பு அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - பஷில் ராஜபக்ஷ

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தோட்டத்துறையில் வீடமைப்பு அபிவிருத்திக்காக அடுத்த மூன்று வருடத்திற்குள் ரூபா 500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனது வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்தார்.

பொதுஜன முன்னணி அரசின் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் பஷில் ராஜபக் ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதன்போது நிதி அமைச்சர் இந்த விடயங்களை சபையில் முன்மொழிந்தார்.

அவர் மேலும் கூறுகையில், சிலர் தமக்கான சொந்த வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்கான பொருளாதார ஆற்றலினைக் கொண்டுள்ளனர். இன்னும் சிலர் வீடுகளை நிர்மாணிப்பதற்கு வங்கிகளிலிருந்து கடனைப் பெற முடியுமாக இருக்கின்றனர்.

இருந்த போதிலும் நகர, கிராமிய மற்றும் தோட்டத் துறைகளில் வாழ்கின்ற அப்பாவி சமூகங்கள் தமது வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்குத் தேவையான உதவியினை அரசாங்கம் வழங்க வேண்டியுள்ளது.

எனவே, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக நகர வீடமைப்புக்காக ரூபா 2,000 மில்லியன் மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிகமாக ரூபா 5,000 மில்லியன் கிராமிய வீடமைப்பு அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள புற நகர்ப் பகுதிகளில் ஏற்கனவே, நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும் கூட்டுத்தாபனங்களின் நிர்மாணத்தினை 2024 வருடமளவில் அளவில் பூரணப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தோட்டமக்களின் வீடமைப்பு நிலைமைபற்றி விளக்குவதற்கு தேவையில்லையென நான் நினைக்கின்றேன். அவற்றின் நிலைமை மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது. குறித்த ஊழியர்கள் பிரதான ஏற்றுமதிப் பயிர்களில் ஒன்றான தேயிலைக்கான அடிப்படையினை வழங்குகின்றனர்.

எனவே, அந்த சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவது எமது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். எனவே, தோட்டத்துறையில் வீடமைப்பு அபிவிருத்திக்காக அடுத்த மூன்று வருடத்திற்குள் ரூபா 500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

No comments:

Post a Comment