கல்லோயா பெருந்தோட்ட (தனியார்) நிறுவனத்தின் 51% பங்குகள் அரசாங்கத்திடமும், 49% பங்குகள் தனியார் துறையிடமும் இருக்கும் நிலையில் குறித்த நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளை இரு தனியார் நிறுவனங்களால் எவ்வாறு எடுக்க முடியும் என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழுவின்) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத், கல்லோயா (தனியார்) நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையிடம் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் 24.11.2021 கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே பேராசிரியர் சரித ஹேரத் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கோப் குழுவின் தலைவர் குறிப்பிடுகையில், ஒன்பது பேரைக் கொண்ட பணிப்பாளர் சபையில் ஐவர் அரசாங்கத் துறையை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், நால்வர் தனியார் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இதில் ஒருவர் பதவி விலகியிருப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் இந்த நிறுவனம் குறித்த முடிவுகளை எடுப்பதற்கு LOLC நிறுவனத்தின் கீழ் முகாமைத்துவ நிறுவனமொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இரு தனியார் துறை நிறுவனங்களுக்கும் உரிய ஒப்பந்தத்தின் கீழ் நிர்வாக ரீதியில் முடிவெடுக்கக் கூடுதலான அதிகாரங்கள் உள்ளது என இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக 51% பங்கைக் கொண்டுள்ள அரசாங்கத் துறைக்கு குறித்த நிறுவனம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்குக் காணப்படும் அதிகாரம் மற்றும் 49 % பங்குகளைக் கொண்டுள்ள தனியார் துறை நிறுவனங்கள் இரண்டுக்குக் காணப்படும் அதிகாரம் என்ன என்பது தொடர்பில் கோப் குழுவின் தலைவர் அதிக கவனம் செலுத்தியிருந்தார்.
அத்துடன், 2010ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் காலவதியாவதற்கு முன்னர் மேலும் பத்து வருடங்களுக்காக அதாவது 2030ஆம் ஆண்டு வரையில் புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டமை தொடர்பிலும் கோப் குழு கவனம் செலுத்தியது.
இந்த நிலையில் கணக்காய்வு திணைக்களத்தினால் விசேட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், அந்த அறிக்கையையும் கலந்தாலோசித்த பின்னரே இந்த கலந்துரையாடலை நடத்த வேண்டுமென கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார். இதன்படி, கல்லோயா பெருந்தோட்ட (தனியார்) நிறுவுனம் தொடர்பான விசாரணை டிசம்பர் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர் சரத் வீரசேகர, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, நாளக கொடஹேவா, இந்திக அநுருத்த, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஷ்பகுமார, கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா, இரான் விக்மரத்ன, பிரேம்நாத். சி தொலவத்த, ரவூப் ஹக்கீம், மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment