31 கட்சிகளுடன் தனிக் கூட்டணியமைக்கத் தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - News View

About Us

About Us

Breaking

Saturday, November 13, 2021

31 கட்சிகளுடன் தனிக் கூட்டணியமைக்கத் தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் பிரதான கோரிக்கையாகவுள்ளது. சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிப்பது எமது பிரதான இலக்காகும். 31 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள அரசியல் தீர்மானங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கும், 31 அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு சுதந்திர கட்சி கிராமிய மட்டத்தில் பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. கட்சியை பலப்படுத்துவது பிரதான நோக்கமாக காணப்படுகிறது. சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிப்பது எமது பிரதான இலக்காக உள்ளது.

அந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத 31 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், சுதந்திர கட்சியின் தலைவர், பாரளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள அரசியல் தீர்மானங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

லிபரல் கட்சி, ஜனதா அருனலு கட்சி,நவ சிங்கள உருமய,ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி, தேசி முன்னணி, முஸ்லிம் உலமா கட்சி, தமிழ் மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீ டெலோ கட்சி, லங்கா மக்கள் தேசிய கட்சி, தொழிலாளர் விடுதலை முன்னணி, ஐக்கிய இலங்கை மகா சபை, புதிய ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய ஸ்ரீ லங்கா முன்னணி, மஹஜன கட்சி, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய காங்கிரஸ், அபேஜன உருமய, மக்கள் சேவை கட்சி, ஹெலபிம மக்கள் கட்சி, தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய லங்கா மக்கள் சக்தி கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சுதந்திர கட்சி தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது கலந்துகொண்டார்கள்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு மக்கள் பல எதிர்பார்ப்புகளக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். தவறான தீர்மானங்களினால் மக்களின் வெறுப்பை அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் பெற்றுக் கொண்டுள்ளது.

சேதன பசளை விவகாரம் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை இனிவரும் காலங்களில் ஏற்படுத்தும். விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை முன்வைக்க வேண்டும் என சுதந்திர கட்சி சார்பில் அரசாங்கத்திடம் பல முறை வலியுறுத்தியுள்ளோம். ஆனால் அரசாங்கம் சிறந்த ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கவில்லை அதனால் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களது பிரதான கோரிக்கையாக காணப்படுகிறது. அடிமட்ட உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து சுதந்திர கட்சி சிறந்த தீர்மானத்தை வெகுவிரைவில் அறிவிக்கும் என்றார்.

No comments:

Post a Comment