அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை, சம்பளத்தை அதிகரிக்க முடியாது : சேதனப் பசளைத்திட்டம் வெற்றி பெற்று, விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் கிடைக்க கடவுளை பிரார்த்திப்போம் - நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ - News View

Breaking

Saturday, November 13, 2021

அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமை, சம்பளத்தை அதிகரிக்க முடியாது : சேதனப் பசளைத்திட்டம் வெற்றி பெற்று, விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் கிடைக்க கடவுளை பிரார்த்திப்போம் - நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்)

அரச சேவையாளர்களின் சம்பளத்தையும், சேவையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க முடியாது. அரச சேவையாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமாயின் மக்களிடமிருந்து அதிக வரி அறவிட வேண்டும். அதனை எம்மால் செய்ய முடியாது என்பதனாலேயே 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கவில்லை. அரச சேவையாளர்கள் நாட்டுக்கு சுமை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் 1947ஆம் ஆண்டு காலகட்டத்திலிருந்து காணப்படுகிறது. ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கங்களும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. பொருட்களின் விலை கட்டுப்பாட்டு விடயத்தில் நேரடியாக தலையிட முடியாது. தேசிய உற்பத்திகள் அதிகரிக்கப்பட்டால் மாத்திரமே பொருட்களின் விலை குறைவடையும் மறுபுறம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கேள்வி அதிகரிக்கும் வகையில் அப்பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஊடகச்சந்திப்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் கேள்வி பதில் வடிவத்தில் வருமாறு,

கேள்வி - சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தில் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றதாக குறிப்பிடப்படுகிறது. அரச சேவையாளர்களுக்கும், ஓய்வூதியலாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என்றும், சேதன பசளை திட்டத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் திட்டம் உள்ளடக்கப்படவில்லை எனவும் குற்றஞ் சாட்டப்படுகிறது ?

பதில் - 2019ஆம் ஆண்டுக்கு பிறகு அரச சேவையாளர்களின் எண்ணிக்கை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அரச சேவையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கும் கிடையாது. தற்போது 13 பேருக்கு ஒரு அரச சேவையாளர் என்ற மட்டத்தில் அரச சேவையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையாளர்களின் சம்பளத்தை இனிவரும் காலங்களிலும் அதிகரிக்க முடியாது அவர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமாயின் மக்கள் மீது அதிக வரிசுமையை விதிக்க வேண்டும் அதனை எம்மால் செய்ய முடியாது. அதன் காரணமாகவே அரச சேவையாளர்களின் சம்பளத்தை வரவு செலவு திட்டத்தில் அதிகரிக்கவில்லை. அரச சேவையாளர்கள் நாட்டு சுமை.

அரச சேவையாளர்களுக்கு மாற்று வழிமுறைகளில் நிவாரணம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரச சேவையாளர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்துள்ளமை அவர்களுக்கு சாதகமாக அமையும். ஓய்வூதியம் பெறுநர்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

சேதன பசளை திட்டம் தோல்வியடையும் என எதிர்மறையாக கருத வேண்டாம். சேதன பசளை திட்டம் வெற்றி பெற வேண்டும், விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் கிடைக்க வேண்டும் என கடவுளை பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்க வேண்டிய தேவை கிடையாது ஏனெனில் அதற்காக அரச நிறுவனங்கள் காணப்படுகின்றன.

கேள்வி - வாழ்க்கை செலவுகளை குறைப்பதற்காக ஏதேனும் திட்டங்கள் ஏன் முன்வைக்கப்படவில்லை ?

பதில் - 1947ஆம் ஆண்டு முதல் வாழ்க்கை செலவு அதிகரிப்பு பிரச்சினை காணப்படுகிறது. தற்போதைய நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் இலங்கைக்கு மாத்திரம் வரையறுத்ததல்ல, அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த எம்மால் நேரடியாக தலையிட முடியாது. தேசிய உற்பத்திகள் அபிவிருத்தியடைந்தால் மாத்திரமே பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியும்.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கேள்வி அதிகரிக்கும் வகையில் அதன் விலை அதிகரிக்கப்படும் உணவு பாதுகாப்பு மற்றும் உற்பத்திக்காக எமது அரசாங்கம்தான் அதிக நிதி ஒதுக்கிட்டுள்ளது.

கேள்வி - விசேட சந்தை பொருட்களுக்கான வரியில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதா ?

பதில் - விசேட சந்தை பொருட்களுக்காக 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வரிக் கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். வரிக் கொள்கை காலத்திற்கு காலம் மாற்றமடையும் போது பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது புதிதாக வரி அறவிடப்படமாட்டாது.

கேள்வி - புதிய உற்பத்தி முதலீட்டு வலயம் தொடர்பில் குறிப்பிட முடியுமா?

பதில் - சேதன பசளை உற்பத்தி, ஆடையுற்பத்தி, விவசாய பொருட்களுக்கான மூலப் பொருள் உற்பத்தி, மருந்து உற்பத்தி பால்மா உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் புதிய முதலீட்டு வலயங்களை ஸ்தாபிக்க திட்டமிட்டுள்ளோம். பிரதேச மற்றும் மாவட்ட செலயக பிரிவுகளிலும் அடையாளப்படுத்தப்பட்ட புதிய முதலீட்டு வலயங்கள் ஸ்தாபிக்கப்படும்.

கேள்வி - பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் வெளிநாட்டு கடன்களை உரிய நேரத்தில் செலுத்த முடியுமா ?

பதில் - பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகவே பாரம்பரிய முறைமைக்கு அப்பாற்பட்ட வகையில் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அரச முறை கடன்களை செலுத்துவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது எதிர்வரும் ஜனவரி மாதம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஜூலை மாதம் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களும் முறையாக செலுத்தப்படும்.

கேள்வி - சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை முன்னேற்ற எவ்வித திட்டங்களும் வரவு செலவு திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.?

பதில் - நாட்டின் பொருளாதாரத்திற்கு சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பு செய்கிறது சுற்றுலாத்துறையை மேம்படுத்த சுற்றுலாத்துறை அமைச்சு மட்டத்தில் உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சேவையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில் இலாபம் பெறும் போது அவர்கள் அதனை திறைச்சேரிக்கு செலுத்தவில்லை.

கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் நாட்டை பாதுகாத்துள்ளோம். அதுவே சுற்றுலாத்துறை சேவையாளர்களுக்கு வழங்கியுள்ள பெரும் நிவாரணமாகும். ஆகவே நெருக்கடியான சூழலில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை முன்னெடுத்து செல்வது அவசியமானதாகும்.

கேள்வி - 2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை.?

பதில் - வரவு செலவு திட்டம் மாகாண அடிப்படையில் வேறுபடுத்தியதாக சமர்பிக்கப்படவில்லை முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எமது ஆட்சியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறந்த அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன அதன் பயனை மக்கள் இன்றும் அனுபவிக்கிறார்கள். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் பயனை நாட்டு மக்கள் அனைவரும் முழுமையான பெறுவார்கள் என்றார்.

No comments:

Post a Comment