(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை இல்லாதொழித்த பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தற்போது அரசாங்கத்தையும் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார். ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இருப்பிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசிமயற்றது அரசாங்கத்துடன் ஒன்றிணைந்திருக்க விருப்பமில்லாதவர்கள் தாராளமாக அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம். அரச வரபிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது பயனற்றது எனவும் குறிப்பிட்டார்.
கம்பஹா-யக்கல விதியவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி பணிக்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் எவ்வித பகைமையும் கிடையாது எமது அரசியல் ஆரம்பம் அக்கட்சியில் இருந்தே ஆரம்பமானது. சுதந்தி கட்சியை இன்றும் மதிக்கிறோம். ஆனால் அக்கட்சியை தற்போது வழிநடத்துபவர்கள் தொடர்பில் பல பிரச்சினைகள் காணப்படுகிறது. அதன் காரணமாகவே இடம் பெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டாம் என பகிரங்கமாக குறிப்பிட்டேன்.
முன்னாள் ஜனாதிபதி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன சுதந்திர கட்சியை முழுமையாக இல்லாதொழித்தார் இன்று அவர அரசாங்கத்தையும் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்துகொண்டு பொது இடங்களில் குறிப்பிடும் கருத்துக்களை கேட்டுக் கொண்டு இருக்கிறோம். தொடர்ந்து வாய் மூடிக் கொண்டு இருக்க முடியாது அவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போது வருத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் அவர்கள் குறிப்பிடுவதை காட்டிலும் எம்மால் மேலதிகமாகவும் குறிப்பிட முடியும்.
அரசாங்கம் என்ற ரீதியில் முன்னேறி செல்ல வேண்டுமாயின் நேரடியான தீர்மானங்கள் எடுப்பது அவசியமாகும். அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து இருக்க விருப்பம் இல்லாவிடின் தாராளமாக அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறலாம். அதனை விடுத்து அரச வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது பயனற்றதாகும்.
அரசாங்கத்தின் இருப்பிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமற்றது அவர்கள் எல்லோரும் அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும் எம்மால் அரசாங்கத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியும் என்றார்.
No comments:
Post a Comment