பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சமூக அபிவிருத்தியில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜா தெரிவித்துள்ளார்.
தலவத்துகொட கிராண்ட் மொனார்ச் விருந்தக மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு எனும் 2018ஆம் ஆண்டு முதலான ஏற்பாடு நடைமுறைக்கு வந்தது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த தெரிவு முறையில் குறைப்பாடுகள் உள்ளபோதும் பெண்கள் தமது தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்த இந்த ஏற்பாடு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பௌதீக அபிவிருத்தி விடயங்களைக் காட்டிலும் உள்ளூர் மட்டத்தில் சமூக அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் பெண் உறுப்பினர்கள் ஆர்வம் காட்டுதல் அவசியம்.
தூய்மையான அரசியல் கலாசாரம் ஒன்றை கட்டியெழுப்பும் பணியை பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் சுமார் 25 பேர் அளவில் செயற்பட்டோம். அதில் பெண் அரசியல் பங்கேற்பை உறுதி செய்வது ஓர் அம்சமாகும். அதேபோல மதிப்பாய்வு சம்பந்தமான கொள்கை மற்றும் சட்ட உருவாக்கத்தைச் செய்வதிலும் எமது பங்களிப்பு இருந்தது.
உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளும் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படுதல் வேண்டும். பெண் உறுப்பினர்களுக்கு உள்ளூராட்சி மன்றத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு நடைமுறை 2018 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் அவர்களின் அரசியல் பங்களிப்புக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மலையக அரசியல் தளத்தில் உரையாடல் அரங்கம் ஒன்று எனது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. அத்தகைய அரங்கத்தின் இலச்சினையை, அரசியலில் ஆண்- பெண் சமவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைத்துள்ளோம். அத்துடன் பெண் தலைமைத்துவ முன்னெடுப்புகளுக்கு எப்போதும் எமது ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment