படகுப்பாதை கவிழ்ந்ததில் 07 பேர் உயிரிழப்பு, 16 பேர் வைத்தியசாலையில் அனுமதி : பலி எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து கிண்ணியாவில் பதற்ற நிலைமை - News View

Breaking

Tuesday, November 23, 2021

படகுப்பாதை கவிழ்ந்ததில் 07 பேர் உயிரிழப்பு, 16 பேர் வைத்தியசாலையில் அனுமதி : பலி எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து கிண்ணியாவில் பதற்ற நிலைமை

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 07 பேர் மரணமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று (23) இடம்பெற்றுள்ளதுடன் குறித்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை வழமை போன்று மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் உள்ளடங்கலாக பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் நேரத்தில் குறித்த படகு பாதையில் 17 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 23 பேர் பயணித்துள்ளதுடன் நீரில் மூழ்கிய சிலர் நீந்தி கரையைச் சேர்ந்துள்ளனர் .
இப்பகுதியில் பழைய பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் நிர்மாணிக்கப்படுவதனால் கிண்ணியா - குருஞ்சான்குளம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த படகு பாதை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த படகில் பயணித்த மேலும் 16 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 3 பேர் தீவிரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் பொலிஸார், கடற்படையினருடன் இணைந்து தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவமானது கிண்ணியா பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்திய சம்பவமாக பதிவாகியுள்ளது.

குறித்த படகு விபத்தின் பலி எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து கிண்ணியாவில் பதற்ற நிலைமை ஏற்ட்டுள்ளது. அங்கு கிண்ணியா மக்கள் பிரதான வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
திருகோணமலை கிண்ணியா பகுதியில் குறிஞ்சாங்கேணி பகுதியில் பாலம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதால் மக்களுக்கான போக்குவரத்துக்காக குறித்த ஆற்றினை கடப்பதற்கு இழுவை படகினை பயன்படுத்தி வந்துள்ளனர்.

தினமும் இந்த இழுவை படகின் ஊடாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று காலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இருந்த போதிலும் கிண்ணியா மக்களின் நீண்டநாள் கனவாக காணப்படும் இந்த பாலம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பாலம் 750 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட வந்த நிலையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment