நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர் நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்படுபவர்கள் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யலாம் - சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் - News View

Breaking

Wednesday, October 13, 2021

நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர் நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்படுபவர்கள் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யலாம் - சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன்

(நா.தனுஜா)

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர் நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்படுபவர்கள், இழப்பீட்டைக் கோரியும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படவில்லை. எதேச்சையாகத் தடுத்து வைக்கப்பட்டமை மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டமை ஆகிய காரணங்களை முன்னிறுத்தியும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்ய முடியும் என்று சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவருமான அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் அதிகாரிகள் வசமுள்ள அதிகாரங்கள் மற்றும் அவை துஷ்பிரயோகம் செய்யப்படும் முறை தொடர்பில் தடுப்புக் காவலில் இருந்த காலத்தில் நன்கறிந்திருக்கக் கூடிய அவர்கள், தாம் அச்சுறுத்தலுக்கும் தொடர் கண்காணிப்பிற்கும் இலக்காகலாம் என்ற அச்சத்தின் காரணமாகப் பெரும்பாலும் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் உள்ளடங்கலாக அடுத்த கட்ட சட்டநகர்வுகளை மேற்கொள்ளவதற்கு முன்வருவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 12 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 வயதுடைய கபிலன் கதிரவேலு என்ற தமிழ் அரசியல் கைதியொருவர், கடந்த திங்கட்கிழமை மொனராகலை நீதவான் நீதிமன்றினால் நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

இது குறித்து 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம், கபிலன் கதிரவேலு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணினார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 2009 ஆம் ஆண்டு அவருக்கு 17 வயதாக இருந்தபோது கைது செய்யப்பட்டார்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட அவர் 2011 ஆம் ஆண்டில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு முன்பாக சுமார் ஒன்றரை ஆண்டுகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லாததன் காரணமாக 12 வருடங்களின் பின்னர் கபிலன் கதிரவேலு கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் அல்லது அதன் சரத்துக்கள் மீளாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பலதரப்பட்ட சர்வதேச கட்டமைப்புக்களாலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் மிக மோசமான தன்மையை மீண்டும் நினைவுறுத்துவதாக அமைந்துள்ளது.

இவ்வாறு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டு, நிரபராதிகள் என்று விடுதலை செய்யக் கூடியவர்கள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்வதற்குக் கொண்டிருக்கக் கூடிய சாத்தியப்பாடு தொடர்பில் சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவருமான அம்பிகா சற்குணநாதனிடம் வினவினோம்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர் நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுபவர்கள் இழப்பீட்டைக் கோரியும் சட்டத்தின்முன் சமமாக நடத்தப்படவில்லை மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டமை ஆகிய காரணங்களை முன்னிறுத்தியும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்யலாம் என்று சுட்டிக்காட்டிய அவர், இருப்பினும் அவ்வாறு சட்ட ரீதியான அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்வதற்குப் பெரும்பாலானோர் முன்வருவதில்லை என்றும் தெரிவித்தார்.

'அதிகாரிகள் வசமுள்ள அதிகாரங்கள் மற்றும் அவை துஷ்பிரயோகம் செய்யப்படும் முறை தொடர்பில் நீண்ட காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் நன்கறிவார்கள். ஏற்கனவே நீண்ட காலத் தடுத்து வைப்பினால் வாழ்வாதாரம் உள்ளிட்ட தனிப்பட்ட நலன்களை இழந்து வெளியேறக் கூடிய ஒருவர், மீண்டும் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்து எஞ்சிய வாழ்க்கையையும் நீதிமன்றம் என்று இழுத்தடிப்புச் செய்வதற்கு விரும்பமாட்டார்.

அதுமாத்திரமன்றி அவ்வாறு அடிப்படை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்யும் பட்சத்தில் தாம் அச்சுறுத்தலுக்கும் தொடர் கண்காணிப்பிற்கும் இலக்காகலாம் என்ற அச்சமும் இதற்கு முக்கிய காரணமாகும்' என்றும் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் விஜித்தா யோகலிங்கம் என்பவரால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டமை குறித்தும் அவ்வழக்கில் அவரது அடிப்படை உரிமை மீறப்பட்டதாகத் தீர்ப்பு வழங்கப்பட்டமை தொடர்பிலும் கூறிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இருப்பினும் அவர் (விஜித்தா யோகலிங்கம்) வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டதாகக்கூறி உரிமை மீறல்களை இழைத்தவர்களுக்கு எதிராக எவ்வித குற்றவியல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமை குறித்தும் எடுத்துரைத்தார்.

அத்தோடு அந்தத் தீர்ப்பின் பிரகாரம் விஜித்தா யோகலிங்கம் மிகவும் மிருகத்தனமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டமை மிக முக்கியமானதாகவும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இது இவ்வாறிருக்க கடந்த செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட், பயங்கரவாத தடைச் சட்டத்தின் மிக மோசமான பிரயோகம் பற்றிப் பிரஸ்தாபித்திருந்ததுடன் அதன் சரத்துக்கள் மீளாய்விற்குட்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் மீளவலியுறுத்தியிருந்தார்.

அதுமாத்திரமன்றி ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையைத் தொடர்ந்து வழங்குவது குறித்த மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக கடந்த மாத இறுதியில் இலங்கை வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவும் பயங்கரவாதத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்வது தொடர்பில் இலங்கையினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment