மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு வரவு செலவு திட்டத்தில் தீர்வு கிடைக்கும் : விலையேற்றத்தை எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாது - டிலான் பெரேரா - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 13, 2021

மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு வரவு செலவு திட்டத்தில் தீர்வு கிடைக்கும் : விலையேற்றத்தை எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாது - டிலான் பெரேரா

(இராஜதுரை ஹஷான்)

கொவிட் தாக்கத்தினால் பூகோளிய மட்டத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை எமது அரசாங்கம் அல்ல எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாது. அதுவே யதார்த்தமான உண்மை. மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு வரவு செலவு திட்டத்தின் ஊடாக தீர்வு கிடைக்கப் பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஒரு கிலோ கிராம் நெல்லுக்கான உத்திரவாத விலை 36 ரூபாவாக காணப்பட்டது. என்பதை சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மறந்து விட்டமை கவலைக்குரியது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு கிலோ கிராம் நெல்லுக்கான உத்தரவாத விலையை 50 ரூபாவாக்கியுள்ளார். இவ்வாறான பின்னணியில் அரசாங்கம் விவசாயத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிடுவது நகைச்சுவையானது.

விவசாயிகள்தான் இந்த அரசாங்கத்தை தோற்று வித்தார்கள் என்பதை பொலன்னறுவைக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது என்று குறிப்பிடும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நினைவுபடுத்த வேண்டும்.

விவசாயிகள், ஆசிரியர்கள், அதிபர்கள், சுகாதார சேவையாளர்கள், என பலதுறைசார் தரப்பினருக்கு பிரச்சினை உண்டு. இவர்களின் பிரச்சினைகளை காட்டிலும் கொவிட் பிரச்சினை பிரதானமானது.

விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நல்ல விலை கொடுக்கப்பட வேண்டும். இருப்பினும் நல்ல விலை பெற்று விவசாயிகள் கொவிட் தாக்கத்தினால் உயிரிழப்பார்களாயின் நல்ல விலை வழங்குவது பயனற்றதாகும்.

ஆகவே கொவிட் தாக்கம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். அரசாங்கம் சிறந்த முறையில் செயற்பட்டதன் காரணமாக கொவிட் தாக்கத்தை முறையாக முகாமைத்துவம் செய்ய முடிந்துள்ளது. கொவிட் தடுப்பூசி செலுத்தலில் ஏனைய நாடுகளை விட இலங்கை முன்னிலை வகிக்கிறது.

தற்போதைய நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை எமது அரசாங்கம் அல்ல எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாது. எமது நாட்டில் எரிபொருள் வளம் கிடையாது. உலக சந்தையில் எரிபொருளின் விலைக்கு அமையவே தேசிய மட்டத்தில் எரிபொருள் விலை தீர்மானிக்கப்படும்.

ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து ஒரு சில மருந்து வகைகள் தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இருப்பினும் ஒரு சில மருந்துகளை தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்ய முடியாது. உலக சந்தையில் மருந்துகளின் விலை அதிகரிக்கும் போது தேசிய மட்டத்தில் அதன் விலை அதிகரிப்படும்.

அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்தும் சரி என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக நான் செயற்படவில்லை. இருப்பினும் கொவிட் தாக்கத்தினால் பூகோளிய மட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மக்கள் எதிர்கொண்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக் கொடுக்கும் என்றார்.

No comments:

Post a Comment