முகம்மது நபியின் பிறந்தநாளை முன்னிட்டு சுபி முஸ்லிம் சமூகத்தினர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ள நிலையில் வஹாப்வாத குழுவினர் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை அவதானத்திற்குரியது. ஆகவே சுபி முஸ்லிம் சமூகத்தினரது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, முகம்மது நபி (ஸல்) அவரது பிறந்த தினத்தையொட்டி இம்மாதம் இந்நாட்டு சுபி முஸ்லிம் சமூகத்தினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகளை இலக்காகக் கொண்டு வஹாப்வாத குழுவினர் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதை கண்காணித்து வருகிறோம்.
கடுமையான முறையில் திட்டுவதும், அச்சுறுத்தல் ஆகியவை கடந்த வாரங்களில் இடம்பெற்று வருகின்றன. இதன் உச்சக்கட்டமாக புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள அம்பலம் மொஹாதீன் முஸ்லிம் பள்ளிவாசலில் 'சுப்ஹானு மவ்லுன் பராயதய' வில் ஈடுப்பட்டிருந்த சுபி பக்தர்கள் பலரை இலக்காகக் கொண்டு வஹாப்வாதிகள் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளார்கள்.
அல்லாஹ் கடவுளின் தூதுவராக இஸ்லாம் மதத்தில் குறிப்பிடப்படும் முகம்மது நபியை வணங்குதலை வஹாப்வாதிகள் புறக்கணிக்கிறார்கள். அல்லாஹ் கடவுளை வணங்குவது சிறந்தது என அவர்கள் கருதுகிறார்கள்.
இருப்பினும் இலங்கையில் உள்ள சுபி முஸ்லிம் சமூகத்தினர் நபி (ஸல்) அவரது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்கள். இதனால் அவர்கள் வஹாப்வாதிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
ஆகவே இம்மாதம் நபி (ஸல்) அவரது பிறந்தநாளை கொண்டாடும் இலங்கை வாழ் சுபி முஸ்லிம் சமூகத்தினரது பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment