(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை. எனவே முழுமையாக தடுப்பூசியை பெற்றிருந்தாலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அத்தோடு 21 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் சகல உயர்தர மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமாகும் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மற்றும் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கையில், திருமணம் உள்ளிட்ட வைபவங்கள் தவிர்க்க முடியாதவை. எனினும் இவற்றில் சம்பிரதாயபூர்வமான விடயங்களை மாத்திரம் பின்பற்றி அநாவசிய ஒன்று கூடல்களை தவிர்த்துக் கொள்வதே தற்காலத்திற்கு பொறுத்தமானதாகும்.
50 - 60 பேருக்கு மாத்திரம் திருமணங்களில் கலந்து கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டாலும் இந்த சந்தர்ப்பத்திலும் கொவிட் வைரஸ் பெரும்பாலானோருக்கு பரவக்கூடிய அபாயம் காணப்படுகிறது. எனவே தொற்று பரவக்கூடிய எந்தவொரு சூழலையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
18 - 19 இடைப்பட்ட வயதுகளையுடடைய எனினும் பாடசாலை செல்லாதவர்கள் தமது வயதை உறுதிப்படுத்தக் கூடிய எந்தவொரு ஆவணத்தையும் காண்பித்து அதாவது, தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம், கடவுச்சீட்டு என்பவற்றை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் காண்பித்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.
விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவிக்கையில், கொழும்பு மாவட்டத்தில் உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஏனைய மாவட்டங்களிலும் உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.
அத்தோடு தத்தமது பாடசாலைகளுக்குச் சென்று தடுப்பூசியைப் பெற முடியாத மாணவர்கள் உரிய ஆவணத்தைக் காண்பித்து சனிக்கிழமைகளில் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.
No comments:
Post a Comment