(இராஜதுரை ஹஷான்)
நல்லாட்சி அரசாங்கத்தின் மோசடிகளை ஆதாரபூர்வமாக பகிரங்கப்படுத்தியதால் இன்று திட்டமிடப்பட்ட பல போலியான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன். முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளேன். அதில் எவ்வித மாற்றமும் கிடையாது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
முகக்கவசம் விநியோகத்தின் ஊடாக இலஞ்சம் பெற்றுக் கொண்டேன் என நுகர்வோர் உரிமைகளை பாதுக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டை துரிதமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை (15) உத்தியோகப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, முகக்கவசம் விநியோகத்தின் ஊடாக இரண்டு ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக எனக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. பொய்யான தகவல்களை அடிப்படையாகவும், பழிவாங்கும் நோக்கத்துடனும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இலவச கல்வித்துறை மேம்பட வேண்டும் என்ற நோக்கில் தகவல் தொழினுட்பத்துறை பாடத்தை அறிமுகம் செய்தேன். இந்த பாடத்தை கற்கும் உயர்தர மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் புலமைபரிசில் வழங்குவதற்காக எனது கடந்த பிறந்த தினத்தன்று 100 இலட்சம் எனது தனிப்பட்ட நிதியை செலவழித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 'பிரக்ஞா பந்து புலமை பரிசில் நிதியம்'ஆரம்பித்தேன். இந்த நிதியத்திற்கு எனது உறவினர்களும், நண்பர்களும் நிதியுதவி வழங்கியுள்ளார்கள். அதற்கமைய தற்போது இந்நிதியத்தில் சுமார் 200 இலட்சம் நிதி உள்ளது.
இவ்வாறான நிலையில் முகக்கவத்தின் ஊடாக இந்நிதியத்திற்கு ஒரு சதம் கூட நிதியுதவி கிடைக்கப் பெறவில்லை. இவ்வாறான நிலையில் இந்த நிதியம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிதியத்திறகு உதவி செய்பவர்களையும், நிதியத்தில் இருந்து புலமை பரிசில் பெறும் மாணவர்களையும் அவமதித்துள்ளது. ஆகவே முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரியுள்ளேன்.
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தியதன் காரணமாகவே இன்று பல போலியான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளேன். முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அரசியில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று குறிப்பிட்டதில் எவ்வித மாற்றமுமில்லை என்றார்.
No comments:
Post a Comment