சேதனப் பசளையில் எதிர்பார்க்கும் விளைச்சல் கிடைக்கா விட்டால் அரசாங்கம் நட்டஈடு வழங்கும் : ஒரு சிலரது அரசியல் நோக்கத்திற்கு உள்ளாகாமல் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுங்கள் - மஹிந்தானந்த அளுத்கமகே - News View

About Us

About Us

Breaking

Friday, October 15, 2021

சேதனப் பசளையில் எதிர்பார்க்கும் விளைச்சல் கிடைக்கா விட்டால் அரசாங்கம் நட்டஈடு வழங்கும் : ஒரு சிலரது அரசியல் நோக்கத்திற்கு உள்ளாகாமல் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுங்கள் - மஹிந்தானந்த அளுத்கமகே

(இராஜதுரை ஹஷான்)

பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரத்தை தற்போது இறக்குமதி செய்ய முடியாது. அதற்கான காலமுமில்லை. இறக்குமதி செய்வதாயின் இரண்டு மாத காலம் காத்திருக்க வேண்டும். ஆகவே விவசாயிகள் ஒரு சிலரது அரசியல் நோக்கத்திற்கு உள்ளாகாமல் விவசாய நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். சேதனப் பசளை பாவனையில் எதிர்பார்க்கும் விளைச்சல் கிடைக்கா விட்டால் அதற்கு அரசாங்கம் நட்டஈடு வழங்கும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பெரும்போக விவசாய நடவடிக்கை ஆரம்பமானது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் குறிப்பிட்டதாவது, பெரும்போக விவசாயத்திற்கு தேவையான உரத்தை கோரி விவசாயிகள் வீதிக்கிறங்கி போராடினார்கள். தற்போது சேதனப் பசளை உரம் தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டும், இறக்குமதி செய்யப்பட்டும் நாடு தழுவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக விவசாய நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பமானது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள 29 கமநல சேவையாளர் பிரிவுகளுக்கு மூன்று வகையான சேதனப் பசளை உரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இம்மாதத்தின் நடுப்பகுதியில் நைட்ரஜன் உள்ளடங்கிய உரம் இறக்குமதி செய்யப்படும். அத்துடன் நெல் மற்றும் சோளப் பயிர்ச் செய்கைக்கு தேவையான உரம் 567 கமநல சேவையாளர் பிரிவுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

உரம் கோரிய விவசாயிகள் தற்போது சேதனப் பசளை வேண்டாம். இரசாயன உரம் வேண்டும் என போராடுகிறார்கள். இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு காலம் போதாது. இறக்குமதி செய்வதாக இருந்தால் 2 மாத காலம் காத்திருக்க வேண்டும். போலியான இரசாயன உரத்தை கோரி விவசாயிகளை போராட்டத்தில் இறக்கி அதனூடாக அரசியல் இலாபம் தேடிக் கொள்ள ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

உரிய நேரத்திற்கு உரம் வழங்குவோம் என்று விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை பாதுகாத்துள்ளோம். தற்போது வழங்கப்பட்டுள்ள உரத்தினால் விளைச்சல் குறைவடைந்தால் அரசாங்கம் அதற்கு நட்டஈடு வழங்கும்.

ஆகவே ஒரு தரப்பினரது அரசியல் நோக்கத்திற்காக போராடுவதை விடுத்து விவசாயிகள் விவசாய நிலங்களில் இறங்கி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அத்துடன் இறக்குமதி செய்யப்பட பொட்டாசியல் குளோரைட் உரம் இரசாயன உரம் என குற்றஞ்சாட்டப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள உரத்தில் சேதனப் பசளைக்கான மூலப் பொருட்கள் உள்ளடங்கியுள்ளது என்றார்.

இவ்வருடத்திற்கான பெரும்போக விவசாய நடவடிக்கை இன்றையதினம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பமானது. பெரும்போக விளைச்சலுக்காக சேனாநாயக்க சமுத்திரத்தில் இருந்து நீர் திறந்து விடுவது மத வழிபாடுகளுடன் ஆரம்பமானது.

சேதனப் பசளை பயன்பாட்டினால் தமது விளைச்சல் முழுமையாக அழிந்துள்ளது. இரசாயன உரத்தை வழங்குமாறு கோரி விவசாயிகள் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பெரும்போக விவசாயம் பயனற்றதாக அமைந்தால் இனி விவசாயத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்படும் என விவசாயிகள் விசனம் தெரிவித்ததுடன், இலவசமாக உரம் வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தில் அதிக விலை கொடுத்து கூட உரத்தை பெற்றுக் கொள்ள முடியாத அவலநிலை தோற்றம் பெற்றுள்ளது என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் இன்று காலி பகுதியில் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள். இரசாயன உரம் பாவிக்கும் போது ஒரு வாரத்திற்கு பறிக்கும் தேயிலை கொழுந்தை தற்போது இரண்டு வாரத்திற்கு பிறகு பறிக்கிறோம். பறிக்கப்படும் தேயிலை கொழுந்து தரமற்றதாக உள்ளது.

இலங்கையின் தேயிலை தொழிற்துறை சந்தையை வீழ்ச்சியடைய செய்து அதனை சீனாவிற்கும், இந்தியாவிற்கும் வழங்கும் சூழ்ச்சியை அரசாங்கம் முன்னெடுக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் தேயிலை உற்பத்தியை கைவிட்டு காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்க வேண்டிய நிலை தான் எமக்கு ஏற்படும் என தேயிலை உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

No comments:

Post a Comment