அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பி அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் : மீறினால் தாதியர் சங்கத்தை இணைத்துக் கொண்டு வெற்றி கொள்ள களத்தில் இறங்குவேன் - முருந்தெட்டுவே ஆனந்த தேரர் - News View

About Us

About Us

Breaking

Friday, October 15, 2021

அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பி அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் : மீறினால் தாதியர் சங்கத்தை இணைத்துக் கொண்டு வெற்றி கொள்ள களத்தில் இறங்குவேன் - முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

(ஆர்.யசி)

அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நம்பி அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும், அவர்களுக்கு நான் சாட்சியமாக இருந்து வாக்குறுதியளிக்கின்றேன். அதேபோல் அரசாங்கம் கொடுத்துள்ள வாக்குறுதிகளை மீறினால், 38 ஆயிரம் ஊழியர்கள் அங்கம் வகிக்கும் எமது தாதியர் சங்கத்தையும் இணைத்துக் கொண்டு ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை வெற்றி கொள்ள அரசாங்கத்தை எதிர்த்து களத்தில் இறங்குவேன் என அபெயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஒரு சில தொழிற்சங்கங்கள் ஆசிரியர் அதிபர் பிரச்சினைகளை அரசியல் மயமாக்க நினைப்பதாகவும் இதனை கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும், எனவே ஆசிரியர் தொழிற்சங்கங்களில் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இது குறித்து கருத்து கூறுகையில்,

ஆசிரியர், அதிபர் போராட்டம் தற்போது 90 ற்கும் அதிகமான நாட்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, இதனால் பாதிக்கப்பட்டுள்ளது மாணவர்களேயாகும். ஆசிரியர் கொடுப்பனவுகள் குறித்த பிரச்சினைகள் நீண்ட காலமாக இடம்பெற்றுக் கொண்டுள்ளது. இதனை ஆசிரியர் சங்கங்கள் கையில் எடுத்துக் கொண்டு போராடினாலும் அவர்களின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. அதனாலேயே நான் தலையிட்டு அரச தரப்புடன் பேசினேன்.

ஆசிரியர் சங்கங்களும் முழுமையாக நியாயமான கருத்துக்களை கூறவில்லை, அதேபோல் அரசாங்கமும் இந்த விடயத்தில் நேர்மையாக செயற்படவில்லை.

எனினும் பிரதமர் மற்றும் சங்கங்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் இரண்டு கட்டங்களில் இந்த கொடுப்பனவுகளை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்கு தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்தனர். ஆனால் பேச்சுவார்த்தையின் போது பிரதமருடன் இணக்கம் தெரிவித்துவிட்டு வெளியில் வந்து மாற்றுக் கருத்துக்களை கூறுவது ஒழுக்கமான செயற்பாடு அல்ல.

ஆகவே தொழிற்சங்க பிரதிநிதிகள் உண்மையாக செயற்படவில்லை. அவர்களின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளதென்பது வெளிப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்காது தமது கொடுப்பனவுகள் மற்றும் அரசாங்கத்தை நெருக்கடியில் தள்ளும் நகர்வுகள் இதன் பின்னணியில் உள்ளது என்பது வெளிப்படுகின்றது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் நாசமாக்கப்படுகின்றது.

நான் தலையிட்ட காரணத்தினால்தான் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அவ்வாறு இருந்தும் தொழிற்சங்கங்கள் மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ளது. நான் தலையிட்டுள்ள காரணத்தினாலும், ஜனாதிபதியும் பிரதமரும் இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக எனக்கு வாக்குறுதி வழங்கியுள்ள காரணத்தினாலும் ஆசிரியர், அதிபர் சங்கங்கள் எனது வாக்குறுதிகளை நம்பி மாணவர்களுக்காக ஆசிரியர் சங்க போராட்டங்களை கைவிடுங்கள்.

இப்போது அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றி அரசாங்கம் சூழ்ச்சி செய்யுமானால் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தாதியர் சங்கத்தில் 38 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். அவர்களையும் இணைத்துக் கொண்டு ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைக்காக அரசாங்கத்தை எதிர்த்து போராடுவேன்.

ஆகவே ஒரு சில சங்கங்கள் அரசியல் நோக்கங்களுக்காக சகல ஆசிரியர்களையும் தவறாக வழிநடத்துவதை நிறுத்த வேண்டும். அதேபோல் ஆசிரியர் அதிபர்களும் சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.

ஆகவே ஆசிரியர்கள் எதற்காகவும் அச்சப்பட வேண்டாம், நாம் முன்னணியில் நிற்கின்றோம் என்பதை உறுதியாக கூறியுள்ளோம். அதுமட்டும் அல்ல, ஆசிரியர்கள் பணிக்கு சென்றால் சம்பளம் கிடைக்கும் இல்லையேல் சம்பளம் வெட்டப்படும் என்பதையும் சகலரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment