பொலிஸார் மீது கத்திக்குத்து; போதைப் பொருள் சந்தேகநபர் கைது - பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகாயம் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 16, 2021

பொலிஸார் மீது கத்திக்குத்து; போதைப் பொருள் சந்தேகநபர் கைது - பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகாயம்

இரு பொலிஸார் மீது போதைப் பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பான சந்தேகநபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (15) மோதறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலி ஹவுஸ் பூங்காவிற்கு அருகில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர், சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை சோதனையிட்ட போது சந்தேகநபர் பொலிஸார் மீது கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

ஆயினும் சந்தேகநபரை கட்டுப்படுத்திய பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபரின் தாக்குதலில் பாரிய வெட்டுக் காயத்துடன், பொலிஸார் இருவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்களை புரிந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இதற்கு முன்னரும் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் கைதாகி, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தவர் என, நிஹால் தல்தூவ மேலும் தெரிவித்தார்.

சந்தேகநபர், கடமைக்கு இடையூறு விளைவித்தமை, பொலிஸார் மீது தாக்குதல் விளைவித்தமை, பாரிய காயங்களை ஏற்படுத்தியமை, கைதாவதிலிருந்து தப்பியோட முயற்சித்தமை உள்ளிட்ட குற்றங்களை புரிந்துள்ளதாக தெரிவித்த அவர், இதுபோன்ற போதைப்பொருள் குற்றவாளிகளால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், சந்தேகநபருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டுமென சுட்டிக் காட்டினார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் கிராண்ட்பாஸ் 75ஆவது தோட்டத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment