ரத்தன தேரரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்; எம்.பி. பதவி பறிக்கப்படுமா? - News View

About Us

About Us

Breaking

Saturday, October 16, 2021

ரத்தன தேரரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்; எம்.பி. பதவி பறிக்கப்படுமா?

அபே ஜனபல கட்சியின் (எமது மக்கள் கட்சி) தேசியப் பட்டியல் எம்.பியான அத்துரலியே ரத்தன தேரரின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் செயலாளர் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் நேற்றையதினம் (15) இது தொடர்பில் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் எம்.பி. பதவி தொடர்பில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

குறித்த பதவிக்கு வர ஞானசார தேரர் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொது பல சேனா உள்ளிட்டோர் அங்கம் வகிக்கும் அபே ஜனபல கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் எம்.பி. பதவியில் காணப்பட்ட இழுபறியைத் தொடர்ந்து அக்கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, கடந்த டிசம்பர் மாதம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அப்பதவிக்கு அத்துரலியே ரத்தன தேரரின் பெயர் குறிப்பிடப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 05 ஆம் திகதி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அவர் பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

நான்காவது முறையாக பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற அவருக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான ஆசன வரிசையின் முன் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கட்சியின் கொள்கைகளை மீறி செயற்பாடு
குறித்த பதவிக்கு வரும்போது, 6 மாத காலங்களுக்கு குறித்த பதவியில் இருப்பதாகவும் அதன் பின்னர் சுயமாக இராஜினாமா செய்து அப்பதவியை ஞானசார தேரருக்கு வழங்குவதாக கட்சியுடன் உடன்பட்டிருந்ததாகவும், அவர் தற்போது அதனை மீறி செயற்பட்டுள்ளதாகவும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசந்த கொடிதுவக்கு இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இதன் காரணமாக அவர் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகமிழைத்துள்ளதாகவும், எனவே அவர் அவரை தற்போது கட்சியிலிருந்து நீக்க கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment