இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் சூதாட்ட நிலையமாக இலங்கை : அரசாங்கம் தேர்தலின் போது மக்களை ஏமாற்ற முயற்சி - எஸ்.எம்.மரிக்கார் - News View

Breaking

Monday, October 11, 2021

இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் சூதாட்ட நிலையமாக இலங்கை : அரசாங்கம் தேர்தலின் போது மக்களை ஏமாற்ற முயற்சி - எஸ்.எம்.மரிக்கார்

(எம்.மனோசித்ரா)

இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை ஒரு சூதாட்ட நிலையமாக பயன்படுத்தி வருகின்றன. இவற்றுக்கு ஏற்றாப்போலவே அரசாங்கமும் செயற்பட்டு வருகிறது. நாடு குறித்தோ நாட்டு மக்களின் எதிர்காலம் குறித்தோ இந்த அரசாங்கம் சிந்திப்பதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

இந்தியாவை மகிழ்விப்பதற்காக அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளமையின் காரணமாக, அதனை இலக்காகக் கொண்டு தற்போது பொருட்களின் விலையை அதிகரித்துள்ள அரசாங்கம், தேர்தலின் போது விலைகளை குறைத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒரு புறத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை ரொக்கட் வேகத்தில் சடுதியாக அதிகரித்துக் கொண்டிருக்கும் அரசாங்கம், மறுபுறத்தில் சீனாவிற்கு துறைமுக நகரத்தையும், இந்தியாவிற்கு துறைமுகத்தையும், அமெரிக்காவிற்கு யுகதணவி மின் உற்பத்தி நிலையத்தையும் வழங்கியுள்ளது. தற்போது இலங்கையானது இந்த நாடுகளின் கேந்திர நிலையமாக மாறியுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்புக்கள் குறித்து கவனம் செலுத்தாத அரசாங்கம், இந்த நாடுகளை மகிழ்விப்பதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

நாடு தற்போதுள்ள நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கென்னியாவிற்கு அவசியமற்ற காரணிக்காக விஜயம் செய்துள்ளார். ராஜபக்ஷ குடும்பத்தின் இறுதி ஆட்சி இது என்பதால் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவை மகிழ்விப்பதற்காக அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கிறது. அதனை இலக்காகக் கொண்டு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள பொருட்களின் விலையை தேர்தலின் போது குறைப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

இந்தியாவை அல்லது யாரையேனும் மகிழ்விப்பதற்காக எந்த தேர்தல் வேண்டுமானாலும் நடத்தப்படலாம். எனினும் அதனை இலக்கு வைத்து அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு மக்கள் ஏமாறப்போவதில்லை. தேர்தல் இடம்பெறும் போது அவர்களின் நிலைப்பாடுகளை தெளிவாக அறிய முடியும் என்றார்.

No comments:

Post a Comment