மக்கள் குறித்து சிறிதளவும் சிந்திக்காமல் விலைகளை அதிகரிக்கும் அரசாங்கம் எதற்கு ? : விமலின் கருத்துக்கள் அரசாங்கத்திற்குள்ள முரண்பாடுகளை தெளிவாகக் காண்பிக்கிறது - திஸ்ஸ அத்தனாயக்க - News View

Breaking

Monday, October 11, 2021

மக்கள் குறித்து சிறிதளவும் சிந்திக்காமல் விலைகளை அதிகரிக்கும் அரசாங்கம் எதற்கு ? : விமலின் கருத்துக்கள் அரசாங்கத்திற்குள்ள முரண்பாடுகளை தெளிவாகக் காண்பிக்கிறது - திஸ்ஸ அத்தனாயக்க

எம்.மனோசித்ரா

மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வார்கள் என்பது குறித்து சிறிதளவும் சிந்திக்காமல் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமானால் அரசாங்கம் என்ற ஒன்று எதற்கு? உண்மையில் தற்போது அரசாங்கம் மக்களின் தேவைக்காக அன்றி வர்த்தகர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க விசனம் வெளியிட்டார்.

அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசாங்கத்திற்குள் காணப்படும் முரண்பாடுகளை தெளிவாகக் காண்பிக்கின்றன. அரசாங்கத்தின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

வேறு கூட்டணி அமைப்பது தொடர்பிலும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இவ்வாறானவர்கள் பகிரங்கமாக தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் திஸ்ஸ அத்தனாயக்க வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்கள் எவ்வாறு அன்றாட வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதை சற்றும் சிந்திக்காது அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாற்றில் என்றும் இல்லாதவாறு பாரதூரமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான விலை அதிகரிப்புக்கள் இடம்பெறுமாயின் அரசாங்கம் என்ற ஒன்று எதற்காக இருக்கிறது? அரசாங்கத்திற்கு இது சாதாரண விடயமாக இருந்தாலும் மக்களுக்கு அதனை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தி இருக்கிறதா?

எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள் மாத்திரமின்றி அரசாங்கத்திற்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களும் இந்த நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்கு பதிலாக அரசாங்கம் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலைவரங்களை அவதானிக்கும் போது தற்போது நாட்டை நிர்வகிப்பது ஜனாதிபதியோ பிரதமரோ அல்ல என்றும் வர்த்தகர்களே அந்த பணியை செய்கின்றனர் என்றும் தோன்றுகிறது.

பொருட்களின் விலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால விதிமுறைகளுக்கு தற்போது என்ன நடந்துள்ளது? அதனை நடைமுறைப்படுத்தியதற்கான நோக்கம் நிறைவேறியுள்ளதா?

சுதந்திரத்தின் பின்னர் எந்தவொரு அரசாங்கத்திலும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை. மக்கள் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்தமைக்கான எதிர்பார்ப்புக்களுக்கு மாறாகவே தற்போதைய செயற்பாடுகள் இடம்பெறுவதாக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் செய்துள்ள பதிவில் அரசாங்கத்தினுள் காணப்படும் முரண்பாடுகள் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

வேறு கூட்டணி அமைப்பது தொடர்பிலும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இவ்வாறானவர்கள் பகிரங்கமாக தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். உண்மையில் அரசாங்கம் தற்போது வாக்களித்த 69 இலட்சம் மக்களின் தேவைக்காக அன்றி வர்த்தகர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக கண்டிக்கிறது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment