இலங்கை மீண்டும் காலனித்துவ நாடாக மாறக்கூடிய அச்சுறுத்தல் நிலையேற்பட்டுள்ளது : ராஜபக்ஷ குடும்பத்தினால் முன்னெடுக்கப்படும் முயற்சியை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - அநுரகுமார திஸாநாயக்க - News View

Breaking

Tuesday, October 5, 2021

இலங்கை மீண்டும் காலனித்துவ நாடாக மாறக்கூடிய அச்சுறுத்தல் நிலையேற்பட்டுள்ளது : ராஜபக்ஷ குடும்பத்தினால் முன்னெடுக்கப்படும் முயற்சியை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - அநுரகுமார திஸாநாயக்க

(நா.தனுஜா)

இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு எமது நாட்டின் தேசிய சொத்துக்களும் அவற்றினூடாக அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கப்படுவதன் விளைவாக இலங்கை மீண்டும் காலனித்துவ நாடாக மாறக்கூடிய அச்சுறுத்தல் நிலையேற்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, அமெரிக்க பிரஜைகளும் அமெரிக்காவிற்குச் செல்வதற்குத் திட்டமிட்டிருப்போரும் உள்ளடங்கியுள்ள ராஜபக்ஷ குடும்பத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த 'சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும்' முயற்சியை முழுமையாகத் தோற்கடிப்பதற்கு நாட்டின் தொழிற்சங்கவாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டிலுள்ள தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததும் பெறுமதி வாய்ந்ததுமான சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அந்நாட்டின் ஆட்சியாளர்களையே சாரும். அவ்வாறிருக்கையில் நாம் பிறக்கும்போது எமது நாட்டிற்கு உரித்துடையதாக இருந்த சொத்துக்கள் இப்போது பிற நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டால், அது எமது நாட்டிற்கு மிகப்பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்மைக் காலத்தில் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் எமது நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் மிகையானளவில் தலையீடுகளை மேற்கொண்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது.

எந்தவொரு நாட்டைப் பொறுத்த வரையிலும் சக்தி வலு மற்றும் துறைமுகங்கள் என்பவை மிகவும் முக்கியமான வளங்களாகும். இருப்பினும் எமது நாட்டின் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கின்றது?

கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 சதவீதமான பங்குகளையும் மின்னுற்பத்தி நிலையத்திற்கான திரவ இயற்கை எரிவாயுவை விநியோகிக்கின்ற தனியுரிமையையும் அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டது. அதனுடன் தொடர்புடைய பல்வேறு ஒப்பந்தங்கள் அமெரிக்க நியூ போர்ட்டஸ் எனேர்ஜி நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இருப்பினும் அவ்வொப்பந்தத்தின் உள்ளடக்கம் தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நாட்டு மக்கள் உள்ளிட்ட எந்தவொரு தரப்பினருக்கும் தெளிவுபடுத்தப்படவில்லை. அதேபோன்று மறுபுறம் அபிவிருத்தி என்ற போர்வையில் கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையம் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது.

அத்தோடு கொழும்புத் துறைமுகத்தின் 13 ஏக்கர் நிலப்பரப்பு துறைமுக சேவை விநியோக மத்திய நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்காக மாதமொன்றுக்கு ஏக்கருக்கு எட்டரை இலட்சம் என்ற மிகச்சொற்ப நிதிக்கு சீன நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவையில் அனுமதி பெறப்பட்டுள்ளது.

மேலும் நாடொன்றுக்கு எரிபொருள் என்பது மிகமுக்கிய வளம் என்பதுடன் அதனை நிர்வகிக்கின்ற அதிகாரம் குறித்த நாட்டின் வசம் இருக்க வேண்டும். இருப்பினும் கடந்த 2002 ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் எரிபொருளைக் கொண்டுவரல், களஞ்சியப்படுத்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் ஆகிய 3 நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கான அதிகாரம் 20 வருட கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவின் ஐ.ஓ.சி நிறுவகத்திற்கு வழங்கப்பட்டது.

இன்னும் ஒன்றரை வருடங்களில் அந்த ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில், அதன் பின்னரான காலப்பகுதியில் மேற்படி அனைத்து அதிகாரங்களும் இலங்கையின் எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு உரியதாக மாறும். இருப்பினும் இதனுடன் தொடர்புடைய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு (தமக்குச் சாதகமான வகையில்) அனுமதி வழங்குமாறு அமைச்சர் உதய கம்மன்பில கோரியுள்ளார்.

இவற்றினூடாக நாட்டின் முக்கிய சொத்துக்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த வளங்கள் அனைத்தையும் அரசாங்கம் வெளிநாடுகளுக்கு வழங்கி வருவதுடன் எதிர்வரும் காலங்களில் வழங்குவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருவது தெளிவாகியுள்ளது. இந்த முயற்சியை தோற்கடிக்க வேண்டியது அவசியமாகும்.

இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு எமது நாட்டின் தேசிய சொத்துக்களும் அவற்றினூடாக அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கப்படுவதன் விளைவாக நாம் மீண்டும் காலனித்துவ நாடாக மாறும் நிலையேற்படும்.

அமெரிக்க பிரஜைகளான ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சியின் கீழ் இலங்கையை மீண்டும் காலனித்துவ நாடாக மாற்றுவதற்கு வழிவகுக்கக் கூடிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே இதனைத் தோற்கடிப்பதற்கு தொழிற்சங்கங்கள், நாட்டு மக்கள் உள்ளடங்கலாக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கேள்வி - சர்வதேச ரீதியில் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் 'பன்டோரா பேப்பர்ஸில்' இலங்கையின் முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது குறித்து உங்களுடைய கருத்து என்ன?

பதில் - நாட்டில் இடம்பெற்ற பல்வேறு ஊழல், மோசடிகள் தொடர்பில் நாம் கடந்த காலங்களில் தகவல்களை வெளிப்படுத்தியிருந்தோம். இருப்பினும் ஆட்சியாளர்கள் அது குறித்து உரிய விசாரணைகளை முன்னெடுக்காமல், அதன் மீதான அவதானத்தைத் திசைதிருப்பும் வகையிலான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்திருக்கின்றார்கள். இருப்பினும் சர்வதேச ரீதியில் இத்தகைய ஆவணங்கள் வெளியாகும்போது, அதில் இலங்கை அரசியல்வாதிகளின் பெயர் உள்ளடங்கியிருப்பது வழக்கமானதாக மாறியிருக்கின்றது.

அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் 'பன்டோரா பேப்பர்ஸில்' பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு நெருக்கமான நபரின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் உடனடியாக நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தலை வழங்கினார்.

இருப்பினும் எமது நாட்டின் ஆட்சியாளர்கள் அமைதியாக இருக்கின்றார்கள். நிரூபமா ராஜபக்ஷ தமது உறவினர் என்பதால் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் இது குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. அதேபோன்று திருக்குமார் நடேசன் தொடர்பில் நான் ஏற்கனவே சில தகவல்களை வெளிப்படுத்தியிருக்கின்றேன்.

மல்வானையிலுள்ள காணி தொடர்பில் பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்டிருக்கும் வழக்கில், அக்காணி உறுதிப்பத்திரம் திருக்குமார் நடேசனின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. எனவே நாம் கூறுவதை நம்பா விட்டாலும், இவ்வாறு சர்வதேச ரீதியில் வெளியாகும் தகவல்கள் தொடர்பிலேனும் அவதானம் செலுத்துமாறு ஊடகங்களிடமும் பொதுமக்களிடமும் கோருகின்றோம் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment