அரசாங்கத்தின் தூரநோக்கு சிந்தனையற்ற தன்னிச்சையான தீர்மானங்களினால் நாடு துரிதகதியில் பஞ்சத்தை நோக்கி நகர்கின்றது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

Breaking

Tuesday, October 5, 2021

அரசாங்கத்தின் தூரநோக்கு சிந்தனையற்ற தன்னிச்சையான தீர்மானங்களினால் நாடு துரிதகதியில் பஞ்சத்தை நோக்கி நகர்கின்றது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

(நா.தனுஜா)

அரசாங்கத்தின் தூரநோக்கு சிந்தனையற்ற தன்னிச்சையான தீர்மானங்களின் விளைவாக நாட்டின் விவசாய உற்பத்தி பெருமளவால் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. இதன் விளைவாக நாடு துரிதகதியில் பஞ்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் விவசாயிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து, அவற்றுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 'கொவிஹதகெஸ்ம' செயற்திட்டத்தின் கீழ் திஸ்ஸமஹாராமவில் உள்ள விவசாயிகள் எதிர்கொண்டிருக்கும் சவால்களை ஆராய்வதற்காக நேற்று திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அப்பகுதிக்கு விஜயம் செய்திருந்ததுடன் அங்குள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

அதன்போது மேற்கண்டவாறு கருத்து வெளியிட்ட அவர் தொடர்ந்து கூறுகையில், விவசாயிகளை ஓர் கருவியாகப் பயன்படுத்தி ஆட்சிபீடமேறிய அரசாங்கம், இப்போது அவர்களின் நலன்களை முற்றிலும் மறந்து செயற்பட்டு வருகின்றது. அண்மைக் காலங்களில் விவசாயிகளும் ஏனைய பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுவோரும் மிகப்பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதுடன் பயர்ச் செய்கை உற்பத்தியும் பெருமளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

தூரநோக்குடன் சிந்திக்காமல், அவ்வப்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான தீர்மானங்களின் விளைவாகவே இந்த நிலையேற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் விளை நிலங்களுக்குச் சென்ற விவசாயிகள் இப்போது நீதிமன்றங்களுக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்கும் உணவளித்த அவர்களின் நலன்களை அரசாங்கம் முழுமையாகப் புறக்கணித்துச் செயற்பட்டு வருகின்றது.

இதன் விளைவாக தற்போதைய அரசாங்கம் நாட்டை துரிதகதியில் பஞ்சத்தை நோக்கி நகர்த்திச் செல்கின்றது. எனவே எதிர்வரும் காலங்களில் முகங்கொடுக்க நேரிடக்கூடிய பஞ்சத்திற்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் இதன்போது விவசாயிகள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள், அவர்களது உற்பத்திப் பொருட்களுக்கு உரியவாறான சந்தை வாய்ப்பின்மை, உரம் மற்றும் விதைகளுக்கான பற்றாக்குறை, அறுவடை முறைகளைப் பின்பற்றுவதில் எதிர்கொண்டிருக்கும் சிரமம், பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் பூச்சிகளின் பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment