மூன்று செயலாளர்கள், இரு தூதுவர்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் குழு அனுமதி - News View

About Us

About Us

Breaking

Saturday, October 23, 2021

மூன்று செயலாளர்கள், இரு தூதுவர்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் குழு அனுமதி

மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் இரு தூதுவர்களுக்கு நேற்று (22) கூடிய பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசாநாயக தெரிவித்தார்.

உயர் பதவிகள் பற்றிய குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் கூடியபோது இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, கமத்தொழில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜே.எம்.உதித் கே.ஜயசிங்க, இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ ஆகியோருக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.

இதனைவிட இத்தாலி குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக ஜகத் வெள்ளவத்தவை நியமிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு எடுத்த தீர்மானத்துக்கும் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. வெள்ளவத்த இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகப் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

அதேநேரம், நைஜீரியா கூட்டாட்சிக் குடியரசுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகப் பதவி வகிக்கும் ஜே.எம்.ஜனக பிரியந்த பண்டாரவை மியன்மார் ஒன்றியக் குடியரசுக்கான தூதுவராக நியமிப்பதற்கும் இக்குழுவில் அனுமதி வழங்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார். உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால.டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, விஜித ஹேரத், ரிஷாட் பதியுதீன், தலதா அத்துகோரள ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment