மாகாண கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின் புதிய நேர அட்டவணையில் ரயில், பஸ் சேவைகள் - News View

Breaking

Wednesday, October 13, 2021

மாகாண கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின் புதிய நேர அட்டவணையில் ரயில், பஸ் சேவைகள்

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் விசேட நேர அட்டவணைக்கமைவாகவே ரயில் சேவைகள் நடைபெறுமென ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான திகதி இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லையென்றும், போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய ரயில் சேவைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுமென்றும் அவர் கூறினார்.

பொதுப் போக்குவரத்து சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து, அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க ஆகியோரின் தலைமையில், (11) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவர் இதனை கூறினார்.

விசேட நேர அட்டவணைக்கு அமைவாக, 130 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன. நெருக்கடியின்றி பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு புதிதாக பல கடுகதி ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுமென்றும், ரயில்வே பொது முகாமையாளர் கூறினார்.

அத்துடன், இலங்கை போக்குவரத்து சபையின் 3,300 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தபட்டுள்ளதாகவும், ரயில் பயணிகளின் வசதி கருதி விசேட பஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார். 

இதேவேளை, போக்குவரத்து சபையின் அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. எனவே, போக்குவரத்து சேவைகளை தொடர்ந்தும் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment