பஸ் கட்டணத்தையும், எரிபொருள் விலையினையும் அதிகரிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது - திலும் அமுனுகம - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 13, 2021

பஸ் கட்டணத்தையும், எரிபொருள் விலையினையும் அதிகரிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது - திலும் அமுனுகம

(இராஜதுரை ஹஷான்)

பஸ் கட்டணத்தையும், எரிபொருள் விலையினையும் அதிகரிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது. கொவிட் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரத்திலிருந்து அரச மற்றும் தனியார் பஸ் சேவையும், புகையிரத சேவையும் வழமை நிலைக்கு திரும்பும் என போக்கு வரத்து மற்றும் சமூதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு பேருந்தில் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்ற வேண்டும் என சுகாதார தரப்பினர் குறிப்பிட்டதை கருத்திற் கொண்டு கடந்த ஜனவரி மாதமளவில் பேருந்து கட்டணம் 20 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டது.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதை போன்று எரிபொருளின் விலையும் அதிகரிக்கப்படும் என கருதி தனியார் பஸ் உரிமையாளர்கள் மீண்டும் பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள். பஸ் கட்டணத்தை அதிகரிக்க ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது. எரிபொருளின் விலையை அதிகரிக்கும் நோக்கமும் கிடையாது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்ட பயணத்தடை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டதனால் தனியார் பஸ் உரிமையாளர்களும், சேவையாளர்களும் தொழிற்துறை ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலர் பஸ் சேவையினை கைவிட்டு பிற தொழில்களுக்கு சென்று விட்டார்கள். இதன் காரணமாக தற்போது மாகாணத்திற்குள் தனியார் பஸ் சேவையினை ஆரம்பிப்பதில் சிக்கல் நிலை காணப்படுகிறது.

தொழிற்துறையில் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும், சேவையாளர்களுக்கும் நிவாரண நிதி வழங்கும் நடவடிக்கை தற்போது நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பேருந்து கட்டணத்தை அதிகரித்தால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவார்கள்.எதிர்வரும் வாரம் முதல் அரச மற்றும் தனியார் பஸ், பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையும் வழமை நிலைக்கு திரும்பும் என்றார்.

No comments:

Post a Comment