தனது மனைவி, இரு குழந்தைகள், தந்தை, தாய் உள்ளிட்ட ஐவர் தீயில் கருகிய சம்பவத்தில் தப்பிய நபருக்கு விளக்கமறியல் : பெற்றோலும் கொள்வனவு, வீட்டில் யாரும் இல்லை எனவும் தெரிவிப்பு - News View

Breaking

Wednesday, October 13, 2021

தனது மனைவி, இரு குழந்தைகள், தந்தை, தாய் உள்ளிட்ட ஐவர் தீயில் கருகிய சம்பவத்தில் தப்பிய நபருக்கு விளக்கமறியல் : பெற்றோலும் கொள்வனவு, வீட்டில் யாரும் இல்லை எனவும் தெரிவிப்பு

ஐந்து உயிர்களை காவு கொண்ட இராகலை முதலாம் பிரிவு தீ விபத்து சம்பவம் தொடர்பாக இராகலை பொலிஸாரால் விசாரணை செய்யப்பட்டு வந்த ஒருவரை இம்மாதம் (25) ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க வலப்பனை நீதிமன்றம் நேற்று (12) மாலை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை வலப்பனை நீதிமன்ற நீதவான் டி.ஆர்.எஸ். குணதாச பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சம்பவம் தொடர்பில் இராகலை பொலிஸார் உட்பட மேலும் பல பொலிஸ் குழுக்கள் கடந்த நான்கு நாட்களாக விசாரணையில் ஈடுபட்டு வந்திருந்தன.

இதன்போது சம்பவத்தில் உயிர் தப்பியிருந்த தங்கையா இரவீந்திரனை இராகலை பொலிஸார், கடந்த இரண்டு தினங்களாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வந்தனர்.

இதன்போது தீ விபத்து சம்பவம் தொடர்பில் ஒரு சில உண்மைகள் வெளிவந்துள்ளன. இரவீந்திரன் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் இராகலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வாங்கியுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், வீடு தீப்பற்றி எரிந்த போது அணைக்க வந்த மக்களிடம் வீட்டில் யாரும் இல்லையென பொய் கூறியதாகவும் பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த அவரை நேற்று (12) பகல் பொலிஸார் கைது செய்தனர்.

அவர் மீது சமத்தப்பட்ட குற்றங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வலப்பனை நீதிமன்றத்தில் மாலை ஆஜர்படுத்திய போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இம்மாதம் 07ஆம் திகதி இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை தோட்டம் முதலாம் பிரிவில் தற்காலிக தனி வீடு ஒன்றில் இரவு 10.15 மணியளவில் தீ விபத்து இடம்பெற்றது.

இந்த தீ விபத்து சம்பவத்தில் ஆறு பேர் வசித்து வந்த வீட்டில் ஒரு வயது மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட ஐவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.

சம்பவத்தில் இராமையா தங்கையா (வயது 61), அவரின் மனைவி செவனமுத்து லெட்சுமி (வயது 57), ஆகியோருடன், மகளான தங்கையா நதியா (வயது 34) இவரின் பிள்ளைகளான, சத்தியநாதன் துவாரகன் (வயது13), (முதல் கணவரின் பிள்ளை) மற்றும் தற்போதைய தந்தையான மோகன்தாஸ் ஹெரோசன் (வயது 01) ஆகியோரே தீயில் கருகி உயிரிழந்தனர்.


மேலும் இந்த தீ விபத்தில் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தாயான தங்கையா நதியாவின் இரண்டாம் கணவருக்கு பிறந்த மோகனதாஸ் ஹெரோசனுக்கு முதலாவது பிறந்த நாள் இந்த சம்பவ தினத்தன்று இரவு கொண்டாடப்பட்ட பின்னரே தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் வீட்டில் வசித்து வந்த தங்கையாயாவின் மகனான இரவீந்திரன் (புளோக்கல் அடிக்கும் தொழில் செய்பவர்) மது போதையில் வீட்டுக்கு வெளியே இருந்த நிலையில் உயிர் தப்பியமை குறிப்பிடத்தக்கது.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன், டி. சந்ரு)

No comments:

Post a Comment