இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கிறது : மக்களின் கட்டுப்பாடற்ற பயணங்கள், சுகாதார விதிமுறைகளை மீறிய செயற்பாடே காரணம் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - News View

Breaking

Monday, October 18, 2021

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கிறது : மக்களின் கட்டுப்பாடற்ற பயணங்கள், சுகாதார விதிமுறைகளை மீறிய செயற்பாடே காரணம் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

நாடு திறக்கப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக அறிகுறியற்ற தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. மக்களின் கட்டுப்பாடற்ற பயணங்கள் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறிய செயற்பாடுகளே இதற்கான காரணமாகும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

அறிகுறிகள் அற்ற தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையானது, எதிர்காலத்தில் நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்தக் கூடும் என்றும் உபுல் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிட்டளவு அதிகரிப்பினை கடந்த சில தினங்களாக அவதானிக்க முடிகிறது.

நாடு திறக்கப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இவ்வாறு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையானது பொதுமக்களின் கட்டுப்பாடற்ற பயணம் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமை என்வற்றினால் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஆகும்.

எவ்வாறிருப்பினும் தற்போது நாடளாவிய ரீதியிலுள்ள சகல பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுத்து நாட்டில் காணப்படும் நிலைமையை நன்றாக மதிப்பீடு செய்து கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான மூலக் காணரத்தை இனங்காண வேண்டும்.

அதே போன்று பொதுமக்களுக்கும் பாரிய பொறுப்பு காணப்படுகிறது. குறிப்பிட்டளவில் அதிகரித்த போக்கினை காண்பிக்கின்ற தொற்றாளர் எண்ணிக்கையை மீண்டும் குறைப்பதற்காக சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் பெருமளவானோருக்கு எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை.

தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளதால் நோய் அறிகுறிகள் தென்படுவதில்லை. எனவேதான் அறிகுறிகள் அற்ற தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது எதிர்காலத்தில் நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்தக் கூடும். காரணம் தற்போதும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத ஒரு தொகையினர் உள்ளனர். இவ்வாறான நிலையில் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றா விட்டால் ஆபாய நிலைக்கு செல்ல வேண்டியேற்படும் என்றார்.

No comments:

Post a Comment