போராட்டங்களில் கைதானவர்களை விடுவிக்க மியன்மார் ராணுவ அரசு முடிவு - News View

Breaking

Monday, October 18, 2021

போராட்டங்களில் கைதானவர்களை விடுவிக்க மியன்மார் ராணுவ அரசு முடிவு

பெப்ரவரி 1ஆம் திகதி மியன்மாரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின், நடந்த போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட 5,636 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு ராணுவ அரசு அறிவித்துள்ளது.

ராணுவ அரசின் தலைவர் மின் ஆங் லைய்ங் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்களில் குறைந்தது 1,178 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 7,355 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் அரசியல் கைதிகளின் உதவிக்கான அமைப்பு (Assistance Association for Political Prisoners) கூறுகிறது.

நாட்டின் நிர்வாகப் பொறுப்பை தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாக மியன்மார் ராணுவம் பெப்ரவரி 1ஆம் திகதி அறிவித்தது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்க ஒப்புக் கொண்டு ஒரு தசாப்தம் கழித்து இது மீண்டும் நடந்தது.

ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட ஆங் சாங் சூகி மற்றும் அவரின் கட்சியினர் செய்த "சட்டவிரோத நடவடிக்கைகளே" ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணம் என ஆட்சியைக் கைப்பற்றியபின் அவர் கூறியிருந்தார்.

2011 இல் ஜனநாயக ஆட்சி அமைவதற்கு முன்பு, சுமார் 50 ஆண்டு காலம் ராணுவத்தின் சர்வாதிகார ஆட்சியை சந்தித்த நாடு மியன்மார்.

அதிகாலை நேரத்தில் ஆங் சான் சூகி மற்றும் பிற அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பாணி, தாங்கள் மறந்து விட்ட அதே ராணுவ பாணியை நினைவுபடுத்துவதாக அந்த மக்களுக்கு இருந்தது.

மியன்மார் - சில குறிப்புகள்
மியன்மார், பர்மா என்று அறியப்படுகிறது. 1948ஆம் ஆண்டு இந்த நாடு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. நவீன வரலாற்றில் பெரும்பாலான காலம் இந்த நாடு ராணுவ ஆட்சியில்தான் இருந்தது.

2010ஆம் ஆண்டு வாக்கில் இந்தப் பிடி தளரத் தொடங்கியது. இதையடுத்து 2015ஆம் ஆண்டு சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஆங் சான் சூகி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு காவலர்கள் மீது ரோஹிஞ்சாக்கள் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு மிகக் கடுமையாக ராணுவம் எதிர்வினையாற்றியதால், சுமார் 5 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்களை நாட்டை விட்டு அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

No comments:

Post a Comment