சம்பள அதிகரிப்பு யோசனையை ஏற்றுக் கொண்டு ஆசிரியர்கள் கடமைக்கு சமுகமளிக்க வேண்டும் : புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான நிபுணர் குழுவின் அறிக்கை நிறைவு - பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் - News View

Breaking

Monday, October 18, 2021

சம்பள அதிகரிப்பு யோசனையை ஏற்றுக் கொண்டு ஆசிரியர்கள் கடமைக்கு சமுகமளிக்க வேண்டும் : புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான நிபுணர் குழுவின் அறிக்கை நிறைவு - பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இரு கட்டங்களாக சம்பளத்தை அதிகரிக்கும் யோசனையை ஏற்றுக் கொண்டு ஆசிரியர்கள் அனைவரும் 21 ஆம் திகதி கடமைக்கு சமுகமளிக்க வேண்டும். ஆசிரியர் சேவையை தொழிலாக கருதாமால் சிறந்த சேவையாக கருத வேண்டும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சுமார் 18 மாத காலத்திற்கு பின்னர் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் 3800 பாடசாலைகளை எதிர்வரும் 21ஆம் திகதி திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதன்முறையாக 3 இலட்சம் மாணவர்கள் வியாழக்கிழமை முதல் பாடசாலைக்கு செல்லவுள்ளார்கள்.

பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும்போது பாடசாலை சூழல் அவர்களுக்கு திருப்திகரமானதாக அமைய வேண்டும்.

கொவிட் வைரஸ் தாக்கம், ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க போராட்டம் கல்வித்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆசிரியர் - அதிபர் சேவையில் வேதன பிரச்சினை உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இப்பிரச்சினை எமது அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டதல்ல. சுமார் 24 வருட காலமாக இப்பிரச்சினை தொடர்கிறது.

ஆசிரியர் - அதிபர் சேவையில் காணப்படும் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் இயலுமான முயற்சிகளை மேற்கொண்டது. பொருளாதார பிரச்சினையின் காரணமாக சம்பளத்தை முழுமையாக அதிகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

இரு கட்டமாக சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஆகவே இந்த யோசனையை ஏற்றுக் கொண்டு ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும்.

இந்தியாவின் குஷிநகர் விமான நிலையத்தின் முதலாவது விமானம் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

இலங்கையில் இருந்து பிக்குகள் பலர் இந்தியாவிற்கு செல்லவுள்ளார்கள். இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் அனைத்து துறைகளிலும் நல்லுறவு காணப்படுகிறது.

புதிய அரசியலமைப்பினை அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு தற்போதைய சூழலிற்கு பொருத்தமற்றதாக உள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான நிபுணர் குழுவினரது அறிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளது. முழுமையான வரைபு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்திற்குள் முழுமையான வரைவு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய அரசியமைப்பு தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு பாராளுமன்றிற்கு உண்டு என்றார்.

No comments:

Post a Comment