(நா.தனுஜா)
அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றதிகாரத்தை மேலும் வலுப்படுத்தியதன் விளைவாக நாட்டின் ஜனநாயகம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமையை ஜனாதிபதி புரிந்துகொண்டிருப்பது அவரது அண்மைய உரையின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய அரசியலமைப்பானது நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, எவ்வித மறைமுக அல்லது தனிப்பட்ட நோக்கங்களுமின்றி உரிய கௌரவத்துடன் தயாரிக்கப்படுவதுடன் கடந்த காலத் தவறுகள் மீளவும் இடம்பெறாதிருப்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, இராணுவத்தின் 72 வருடப் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் எதிர்காலத்தில் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய பல்வேறு முக்கிய விடயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது உரையில் கூறப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில், தாமதமாகவேனும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் சமூகத்தின் மத்தியில் கௌரவத்தையும் பெற்று நாட்டை முன்நோக்கிக் கொண்டுசெல்லக் கூடிய வாய்ப்பை ஜனாதிபதி பெறுவார். அதற்கு எம்முடைய ஒத்துழைப்பையும் வழங்கும் நோக்கில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் புத்திஜீவிகள் குழுவினால் தயாரிக்கப்பட்ட 15 முக்கிய யோசனைகளை ஏற்கனவே ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தோம். அது குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு மீண்டும் கேட்டுக் கொள்கின்றோம்.
கடந்த இரு வருடங்களில் தவறுகள் இடம்பெற்றிருப்பதுடன் குறைபாடுகளும் காணப்படுவதாக ஜனாதிபதி அவரது உரையில் ஏற்றுக் கொண்டமை வரவேற்கத்தக்க விடயமாகும். அதுமாத்திரமன்றி நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் அதேவேளை, மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் அவர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய தருணம் இதுவாகும்.
எதிர்வரும் வருடங்களில் புதிய அரசியலமைப்பையும் புதிய தேர்தல் முறையையும் நாட்டிற்கு அறிமுகப்படுத்துவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்திருப்பது மிகவும் முக்கியமானதும் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டியதுமான விடயமாகும்.
அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றதிகாரத்தை மேலும் வலுப்படுத்தியதன் விளைவாக நாட்டின் ஜனநாயகம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமையை அவர் புரிந்துகொண்டிருப்பது மிகவும் சிறந்ததாகும்.
நாட்டில் பெரும்பான்மையானோர் நிறைவேற்றதிகாரத்திற்கு முன்னுரிமையளிக்கும் தற்போதைய அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகையினால் புதிய அரசியலமைப்பொன்றின் தேவையை ஜனாதிபதி உணர்ந்துகொண்டிருப்பது நாட்டிற்கு நன்மையளிக்கும்.
நாட்டின் சுயாதீனத்தன்மை, மக்கள் இறையாண்மை, சுதந்திரம், உரிமைகள், நீதிமன்ற சுயாதீனத்துவம் உள்ளிட்ட அனைத்து முக்கிய விடயங்களும் அரசியலமைப்பின் ஊடாகவே தீர்மானிக்கப்படும்.
எனவே நாம் புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றோம். அதிலும் குறிப்பாக அரசியலமைப்பின் ஊடாக பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்தும் அதேவேளை, எதேச்சதிகாரப்போக்கிலான நிறைவேற்றதிகாரத்தின் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியிருக்கின்றோம்.
புதிய அரசியலமைப்பானது நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, எவ்வித மறைமுக அல்லது தனிப்பட்ட நோக்கங்களுமின்றி உரிய கௌரவத்துடன் தயாரிக்கப்பட வேண்டும். அதுமாத்திரமன்றி அரசியலமைப்புத் தயாரிப்புக்குழுவானது அதுபற்றி நன்கு அறிந்தவர்களால் வழிநடத்தப்பட வேண்டும்.
அத்தோடு கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகள் மீளவும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதன்படி புதிய அரசியலமைப்பில் பிரதானமாக உள்ளடக்கப்படவிருக்கும் அடிப்படைக் கொள்கைகளை இனங்கண்டு, அவை தொடர்பில் பொது இணக்கப்பாடொன்று எட்டப்பட வேண்டும். அந்த அடிப்படைக் கொள்கைகளைப் பொதுமக்களும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பகிரங்கப்படுத்த வேண்டும்.
அடுத்ததாக 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அவரது உரையில் தெரிவித்திருக்கின்றார். ஆனால் தற்போதுவரை அது நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை.
நீதிமன்றத்தினால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்குக்கூட ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கபபடுகின்றது.
அமைச்சர்கள் சிறைச்சாலைகளுக்குள் அத்துமீறி உள்நுழைந்து கைதிகளை அச்சுறுத்துகின்றார்கள். எனவே இவ்வாறான சம்பவங்களில் உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படுவதன் ஊடாக அனைவருக்கும் ஒரே விதமாகவே சட்டம் பிரயோகிக்கப்படுகின்றது என்ற நம்பிக்கையை மக்கள் மனங்களில் விதைக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment