திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு கொடுத்து விட்டதாக கூறுவது முழுப் பொய் - விஜித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 14, 2021

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு கொடுத்து விட்டதாக கூறுவது முழுப் பொய் - விஜித ஹேரத்

(ஆர்.யசி)

திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் ஒருபோதும் இந்தியாவிற்கு சொந்தமாக்கப்படவில்லை. உடன்படிக்கை மூலமாக இவற்றை இந்தியாவிற்கு கொடுத்து விட்டதாக கூறுவது முழுப் பொய்யாகும் எனவும், சகல எண்ணெய்க் குதங்களும் இலங்கைக்கே சொந்தமாக உள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு கொடுக்கப் போகின்றோமா? இல்லையா? என்பதை அரசாங்கமே கூற வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு வழங்குவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை கூறும்போதே அவர் இதனை தெரிவித்தார்,

அவர் மேலும் கூறுகையில், திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் 2003 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி உடன்படிக்கை ஒன்றை இந்தியாவுடன் செய்துகொண்டது.

இந்த உடன்படிக்கை 20 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்ற அடிப்படையில் செய்துகொள்ளப்பட்டது. அதேபோல் இந்த உடன்படிக்கையை செய்த வேளையில் வரி உடன்படிக்கை ஒன்றினையும் செய்ய வேண்டும் என முதலாம் உடன்படிகையில் கூறப்பட்டிருந்தது.

அதாவது முதலாவதாக செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை நடைமுறைப்படுத்தும் ஆறு மாத காலத்திற்குள் வரி உடன்படிக்கை ஒன்றினை செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாய சரத்தொன்று உள்ளது. ஆனால் அவ்வாறான வரி உடன்படிக்கை எதுவும் செய்துகொள்ளவில்லை. ஏனென்றால், நாம் தலையிட்டு அப்போதைய ஆட்சியை மாற்றினோம்.

2003 ஆம் ஆண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் 2004 ஆம் ஆண்டில் நாம் தலையிட்டு ஆட்சியை மாற்றிய காரணத்தினால் இந்த வரி ஒப்பந்தம் கைவிடப்பட்டது. ஆகவே, திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் இந்தியாவிற்கு சொந்தம் என்பது முழுப் பொய்யாகும். சகல எண்ணெய்க் குதங்களும் இலங்கைக்கே சொந்தமாகும்.

அமைச்சர் உதய கம்மன்பில அரசாங்கத்தில் காவல் நாய் போன்று செயற்படுவதாக கூறினார். அரசாங்கத்தில் இருக்கும் நாய்கள் அதன் பணியைக்கூட சரியாக செய்யாது இலங்கையின் வளங்களை இந்தியாவிற்கு கொடுக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதே இப்போதும் இடம்பெற்றுக் கொண்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்காது எனக் கூறி இரண்டு மாதங்களுக்கு முன்னர் விலை அதிகரிப்பை செய்தனர். இப்பொது மீண்டும் எரிபொருள் அதிகரிக்கப் போகின்றது. இந்நிலையில் எண்ணெய்க் குதங்களை காரணம் காட்டவே அரசாங்கம் முயற்சிக்கின்றது எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment