அரசியலமைப்பு இடம் தந்தால் ஹரீஸின் சவாலை ஏற்க தயார் : ஆறு மாத கால அவகாசத்தில் பிரச்சினைகளை முடிப்பேன் - தேசிய காங்கிரசின் அமைப்பாளர் றிசாத் செரீப் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 14, 2021

அரசியலமைப்பு இடம் தந்தால் ஹரீஸின் சவாலை ஏற்க தயார் : ஆறு மாத கால அவகாசத்தில் பிரச்சினைகளை முடிப்பேன் - தேசிய காங்கிரசின் அமைப்பாளர் றிசாத் செரீப்

தொடர்ந்தும் மக்களை முட்டாள்களாக்குவது போன்று இப்போதும் மக்களை மடையர்களென எண்ணி இலங்கை வாழ் முஸ்லிங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு திட்டத்தை முன்வைத்து யாராவது ஒருவர் ஏற்றுக் கொண்டால் உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்கள் வாயிலாக அறிவித்துள்ளார். அவரது சவாலை ஏற்றுக் கொள்ள தான் தயாராக உள்ளதாக தேசிய காங்கிரசின் கல்முனை அமைப்பாளர் றிஷாத் ஷெரீப் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளராக களமிறங்கி மக்களின் வாக்குகளினால் பாராளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தால் எப்படி தீர்வு திட்டத்தை முன்மொழிபவருக்கு அந்த பதவியை வழங்க முடியும். 

பட்டியலில் அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் அல்லது கட்சி விரும்புகின்ற பட்டியலில் உள்ள ஒருவர்தான் பாராளுமன்ற உறுப்பினராக வருவார் இதுதான் இலங்கை அரசியலமைப்பின் சட்டம். அதனை அறியாமலா 20 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக அவர் இருந்தார் எனும் கேள்வி என்னுள் எழுகிறது.

அவரது சவாலை ஏற்று கல்முனை விவகாரம், சாய்ந்தமருது நகர சபை விவகாரம், முஸ்லிங்களின் சமய, சமூக காணிப் பிரச்சினைகள் உட்பட சகல பிரச்சினைகளுக்குமான தீர்வை பெற்றுத்தர தான் தயாராக உள்ளதாகவும், அரசியலமைப்பு இடம் தந்தால் ஆறு மாத அவகாசத்தினுள் இப்பிரச்சினைகளுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவேன் என்றும், அவ்வாறு பெற்றுத்தர முடியாவிட்டால் ஹரீசிற்கு அரசியலில் அடிமைச் சேவகம் செய்வேன் என்றும் அவர் மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறிருப்பினும் தான் இராஜினாமா செய்வதனூடாக தான் விரும்பும் யாரோ ஒருவரை எம்பியாக்க முடியாதெனும் உண்மை சகோதரர் ஹரீசிற்கு நன்கு தெரிந்திருப்பினும் காலாகாலமாக அவர் மக்களை ஏமாற்றுவது போல் இப்போதும் ஏமாற்ற எத்தனிப்பது மூளையுள்ளவனுக்குப்புரியுமென்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தனக்கு மிகவும் சாதகமாகவுள்ள இந்தச் சூழலில் கல்முனை பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தருவதுடன் சாய்ந்தமருதுக்குரிய நகர சபையையும் பெற்றுத் தருமாறும், பிச்சைக்காரனின் புண்ணைப் போல் இதனை இன்னுமின்னும் நீட்டிச் சென்று அரசியல் ஆதாயம் அடையவேண்டாமென்று தான் மிக வினயமாக சகோதரர் ஹரீஸை கோருவதாகவும் தெரிவித்தார்

No comments:

Post a Comment