(நா.தனுஜா)
அருட்தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டமையைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கத்தோலிக்கத் திருச்சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தலையீடுகளை மட்டுப்படுத்துவதற்கும் அவர்களை அச்சுறுத்துவதற்குமே இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று 30 மாதங்கள் கடந்துள்ளன. இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, அதன் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்து ஒரு வருடம் பூர்த்தியடையவுள்ளது.
இந்தத் தாக்குதல்களால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அந்தப் பாதிப்புக்கள் குறித்தவொரு இன அல்லது மத சமூகத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல. மாறாக அவை ஒட்டுமொத்த நாட்டிற்கும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாகும்.
எனவே உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான உண்மைத் தகவல்களையும் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களையும் வெளிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அதில் தாமதமேற்படுவதென்பது நீதியை நிலைநாட்டுவதில் சிக்கல்கள் காணப்படுவதையே வெளிப்படுத்துகின்றது.
நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் ஊடாக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அருட்தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டமை மிகவும் பாரதூரமான விடயமாகும்.
தனது நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியதாக புலனாய்வுப் பிரிவின் பிரதானியினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாகவே சிறில் காமினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களில், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்திற்கு அமைவாக தண்டனை வழங்கப்படக் கூடிய குற்றமொன்று தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் ஒருவரின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதென்பது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய குற்றமல்ல.
உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்து, இத்தாக்குதல்களின் பின்னணியிலுள்ள பிரதான சூத்திரதாரியையும் ஏனைய பொறுப்புக்கூற வேண்டியவர்களையும் கண்டறிவதற்கு அரசாங்கத்திற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதே புலனாய்வுப் பிரிவுப் பிரதானி நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்.
மாறாக இவ்விடயம் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்துபவர்கள் அல்லது விசாரணைகள் தொடர்பில் கேள்வியெழுப்புபவர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்தவாறு காலத்தைக் கடத்துவது அவரது பணியல்ல.
இத்தகைய செயற்பாடுகள் உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கத்தோலிக்கத்திருச் சபை மேற்கொள்ளும் தலையீடுகளை மட்டுப்படுத்துவதற்கும் அவர்களை அச்சுறுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளேயாகும்.
அதுமாத்திரமன்றி தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குரலெழுப்பி வரும் கத்தோலிக்கத் திருச் சபையை பிரதிவாதிகளாக மாற்றி, விசாரணைகளை முழுமையாக வேறுபக்கம் திசைதிருப்புவதே இத்தகைய நடவடிக்கைகளின் உள்நோக்கமாகும்.
இந்நிலையில் அருட்தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டமையை நாம் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம்.
அதேவேளை தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுமாறும் வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment