நாட்டின் சுயாதீனக் கட்டமைப்புக்கள் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை இழக்கும் வகையில் அரசின் செயற்பாடுகள் - ஐக்கிய சட்டத்தரணிகள் சக்தி - News View

Breaking

Wednesday, October 20, 2021

நாட்டின் சுயாதீனக் கட்டமைப்புக்கள் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை இழக்கும் வகையில் அரசின் செயற்பாடுகள் - ஐக்கிய சட்டத்தரணிகள் சக்தி

(நா.தனுஜா)

ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் விசேட விசாரணை ஆணைக்குழுக்கள் தற்போது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காகவும் அரசியல் ரீதியான பழிவாங்கல்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றமை, நீதித்துறையில் அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படும் அநாவசியமான தலையீடுகளினால் அக்கட்டமைப்பின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழத்தல், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் சுயாதீனமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் வலுவடைந்திருத்தல் ஆகியன தொடர்பில் சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய சட்டத்தரணிகள் சக்தியின் பிரதிநிதிகள், இவை சுயாதீன கட்டமைப்புக்கள் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை சிதைவடைவதற்கே வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (18) மாலை ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கட்சியின் ஓரங்கமாகச் செயற்பட்டு வரும் ஐக்கிய சட்டத்தரணிகள் சக்தியின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

சட்டத்தரணி திரு.சுதாத் விக்கிரமரத்ன, 1978 ஆம் ஆண்டில் ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் கொண்டுவரப்பட்ட திருத்தச் சட்டங்களின் பிரகாரம் பொது நிறுவனம் அல்லது மாகாண ரீதியான கட்டமைப்பொன்றின் சட்டத்துறைசார் நிர்வாகத்தில் ஓர் அரச அதிகாரியின் பங்கு அல்லது மக்களின் பாதுகாப்பு, நலன் குறித்து விசாரணை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. எனவே 1978 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியால் விசேட விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க முடியும்.

இருப்பினும் விசேட ஆணைக்குழுவை அமைப்பது குறித்து 1978 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணிகளுக்குப் பதிலாக, அச்சட்டம் தற்போது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அதனூடாக அரசியல் ரீதியான பழிவாங்கல்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றி இச்சட்டத்தைப் பயன்படுத்தி சிலரின் குடிமை உரிமைகளை ஒழிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றுது என்று சுட்டிக்காட்டினார்.

சட்டத்தரணி கமல் விஜயசிரி, அண்மைக் காலத்தில் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதும் பின்னர் அவை மீளப் பெறப்படுவதும் நியாயமான முறையில் இடம்பெறுகின்றதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

1979 ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 15 ஆம் இலக்கத்தின் கீழான 160 ஆம் பிரிவின் ஊடாக நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய முடியும் என்பதுடன் குற்றப் பத்தரிகைகளைத் தாக்கல் செய்வதற்கான அடிப்படைகள் எவையென்பது குறித்தும் அச்சட்டத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அண்மையில் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரியவாறான நடைமுறைகள் பின்பற்றப்படாமல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை மீளப் பெறப்பட்டமை மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அரசியல்வாதிகள் நீதித்துறையில் தேவையற்ற தலையீடுகளைச் செய்யும்போது, அக்கட்டமைப்பின் மீது மக்கள் கொண்டிருக்கக் கூடிய நம்பிக்கை சிதைவடைகின்றது. தவறு செய்யும் ஒருவர் சட்டத்தின் ஊடாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சட்டத்தரணி ரஜித லக்மால், நாடொன்றின் மிக முக்கிய கட்டமைப்பாக இருக்கக்கூடிய நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையைத் தற்போதைய அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்பது குறித்து மக்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கின்றார்கள்.

அதேவேளை மறுபுறம் 1994 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான ஓர் சுயாதீன கட்டமைப்பாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் நாட்டின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கும் நிலையில், அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தின் ஊடாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கான அதிகாரிகளின் நியமனங்கள் சுயாதீனமானதும் வெளிப்படைத் தன்மையானதுமான முறையில் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களின் நியமன விவகாரத்தில் பல்வேறு குறைபாடுகளைத் தோற்றுவித்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதன் பணிகளை சுயாதீனமான முறையில் முன்னெடுத்து வருகின்றதா? என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் காணப்படுவதாகக் கூறி ஏற்கனவே இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்கள் அவற்றிலிருந்து விடுவிக்கப்படுகின்றார்கள். இதனை எம்மால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மாறாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதை நோக்காகக் கொண்டு நாம் செயற்படுவோம்.

அதுமாத்திரமன்றி பன்டோரா ஆவணங்களின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுகின்றார். அரசியலமைப்பின் பிரகாரம் அவ்வாறு உத்தரவிடும் அதிகாரம் அவருக்கு இருக்கின்றதா? இவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், இவ்விடயம் தொடர்பில் ஆணைக்குழுவினால் உரியவாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகவே காணப்படுகின்றது என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment