12 வயதிற்குக் குறைந்த மாணவர்களை பாதுகாப்பதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா? : அநாவசிய நிதி ஒதுக்கீடுகளைத் தவிர்த்து அதிபர், ஆசிரிய ஊதியப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுங்கள் - ரோஹினி கவிரத்ன - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 20, 2021

12 வயதிற்குக் குறைந்த மாணவர்களை பாதுகாப்பதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா? : அநாவசிய நிதி ஒதுக்கீடுகளைத் தவிர்த்து அதிபர், ஆசிரிய ஊதியப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுங்கள் - ரோஹினி கவிரத்ன

(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக ஆரம்ப மற்றும் கனிஷ்ட பாடசாலைகளை மீளத் திறப்பதற்கே அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனவே அவற்றில் கல்வி பயிலக்கூடிய 12 வயதிற்குக் குறைந்த மாணவர்களைக் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமாத்திரமன்றி மேற்குறிப்பிட்டவாறு பாடசாலைகளைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மாணவர்களின் நலனை முன்னிறுத்தியது அல்ல. மாறாக ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முடிவிற்குக்கொண்டுவருவதற்காகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

தமது நலன்களை உறுதிசெய்து கொள்வதற்காக எந்தவொரு தரப்பினரையும் பலிகொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பது இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் செவ்வாய்கிழமை (19) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பளப் பிரச்சினை காணப்படுகின்றமை அமைச்சரவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள போதிலும் இன்னமும் அரசாங்கம் அதற்கு உரியவாறான தீர்வைப் பெற்றுக் கொடுக்கவில்லை.

குறிப்பாக சுபோதினி குழுவின் பரிந்துரைக்கு அமைவாக வழங்கப்படும் தீர்வை ஏற்றுக் கொள்வதற்கு ஆசிரியர்கள் தயாராக இருந்தார்கள். ஆனால் அதனை ஒரே தடவையில் வழங்காமல் (கொடுப்பனவு) மூன்று கட்டங்களாக வழங்குவதாக அரசாங்கம் கூறியது. அதனை ஆசிரியர்கள் எதிர்த்தபோது அவர்கள் மீது அரசாங்கம் அடக்குமுறையைப் பிரயோகிப்பதற்கும் பிளவுகளை ஏற்படுத்துவதற்கும் முற்படுகின்றது.

அதன் ஓரங்கமாக ஆசிரியர்களுக்கு எதிராக ஒருபுறம் மாணவர்களையும் மறுபுறம் ஆசிரியர்களையும் ஒன்றுதிரட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேவேளை தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றிய ஆசியர்களில் பெரும்பாலானோர், இப்போது அதே அரசாங்கத்தை பதவி இறக்குவதற்காக வீதிகளில் இறங்கிப் போராடுவதை அவதானிக்க முடிகின்றது.

ஆசிரியர்களின் நடவடிக்கைகளாலேயே மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் பாதிப்பேற்பட்டிருப்பதனைப் போன்ற கருத்துக்கள் அரசாங்கத்தினால் வெளியிடப்படுகின்றன.

நாடளாவிய ரீதியில் சுமார் 40 சதவீதமான மாணவர்கள் நிகழ்நிலை மூலமான கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இருப்பினும் நிகழ்நிலை மூலமான கல்விச் செயற்பாடுகளை உரியவாறு முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்காமையே கல்வித்துறை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும்.

சுபோதினி குழுவின் பரிந்துரையின் பிரகாரம் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கு 30 பில்லின் ரூபா போதுமானதாகும். ஆனால் அடுத்து வரக்கூடிய தேர்தலை இலக்காகக் கொண்டு அரசாங்கத்தினால் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி 100 பில்லியன் ரூபாவைக் கடந்துள்ளது.

எனவே இவ்வாறான அநாவசிய செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளைத் தவிர்த்து விட்டு, அதனைப் பயன்படுத்தி அதிபர், ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுகின்ற ஆசிரியர்களைத் தூற்றுகின்ற அரசாங்கத்தின் பிரதிநிதிகள், கெரவலப்பிட்டி யுகதனவி மின் நிலையம் உள்ளடங்கலாக நாட்டின் பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டபோது ஏன் அமைதி காத்தது?

அதேபோன்று இரசாயன உர இறக்குமதி இடைநிறுத்தப்பட்டமையைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் விவசாயிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதுடன் விவசாயம் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கை உற்பத்திகள் வீழ்ச்சியடைந்துள்ளன. ஆனால் இவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

No comments:

Post a Comment