திருமலை மாவட்டத்தில் 8000 குடும்பங்கள் மலசலகூட வசதியின்றி வாழ்கின்றனர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 6, 2021

திருமலை மாவட்டத்தில் 8000 குடும்பங்கள் மலசலகூட வசதியின்றி வாழ்கின்றனர்

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட மலசலகூடங்களை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வும் மாற்றுத் திறனாளிகள் 50 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வும் திங்கட்கிழமை (4) கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

ஜேர்மன் கூட்டுறவு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் கிண்ணியா சேவிங் ஹியூமினிடி பவுண்டேஷன்(Seving huminity Fountation) இதனை வழங்கி வைத்தது. 

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம் ஏ. அனஸ், மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ச பாண்டி கோரல, சேவிங் ஹியூமினிடி பவுண்டேஷன் பணிப்பாளர் ரீ.எம். ஜரூக், செயலாளர் ஏ.எம். முர்ஷித். செயற்றிட்ட முகாமையாளர்​ ஏ. பி. தலால் அகமட், செயற்றிட்ட அதிகாரி ஏ.எம். ஆசிக் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதன்போது கிண்ணியா பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில், கடந்த கால யுத்தம் காரணமாக கிண்ணியாவில் 17 கிராம சேவகர் பிரிவுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரதேசங்களில் இன்னும் வாழ்வாதார செயற்பாடுகள் பூரண படுத்தப்படவில்லை. 

இந்த நிலையில் இவ்வாறான உதவிகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த கூடியதாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதற்காக இந்த நிறுவனத்துக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

திருகோணமலை மாவட்ட செயலாளர் கருத்து தெரிவிக்கையில், இந்த மாவட்டத்தில் சுமார் 8000 குடும்பங்கள் மலசலகூட வசதி இன்றி இருக்கின்றன. இந்த நிலையில் இன்று 26 குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற மலசலகூடம் மிகப்பெரிய உதவியாக இருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மாவட்டம் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கிய ஒரு மாவட்டமாகும். இந்த நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை சில பிரதேச செயலகங்கள் வேண்டி நிற்கின்றன. 

எனவே அவர்கள் பிரதேச செயலகங்கலோடு, இணைந்து இவ்வாறான மக்கள் சேவையினை செய்யவேண்டி இருப்பது காலத்தின் தேவையாகும்.

(கிண்ணியா மத்திய நிருபர்)

No comments:

Post a Comment