தலிபான்களால் 13 ஹசரா இன மக்கள் படுகொலை - News View

Breaking

Wednesday, October 6, 2021

தலிபான்களால் 13 ஹசரா இன மக்கள் படுகொலை

தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய விரைவில் மத்திய மாகாணமான டைக்குண்டுவில் 17 வயது சிறுமி உட்பட ஹசரா இனக் குழுவைச் சேர்ந்த குறைந்தது 13 பேரை படுகொலை செய்திருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி கித்ர் மாவட்டத்திற்குள் நுழைந்த 300 தலிபான் போராளிகளைக் கொண்ட குழுவால், ஆப்கான் பாதுகாப்புப் படையின் குறைந்தது 11 முன்னாள் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். 

இவர்களில் சரணடைந்த ஒன்பது பேர் அருகில் இருக்கும் ஆற்றுப் படுகைக்கு அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக நேற்று வெளியான அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்போது தப்பிச் செல்லும் ஆப்கான் படையினரை இலக்கு வைத்து தலிபான்கள் நடத்திய தாக்குதலின்போது மசூமா என்ற பதின்ம வயது சிறுமி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். புதிதாக திருமணம் புரிந்த 20 வயதுகளில் இருக்கும் மற்றொரு பொதுமகனும் இதன்போது கொல்லப்பட்டுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஹசரா இனத்தைச் சேர்ந்தவர்களாவர். இதற்கு முன் 1996 மற்றும் 2001 வரை தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோதும் இந்த மக்கள் பாகுபாட்டுக்கு முகம்கொடுத்தார்கள். முன்னதாக கடந்த ஜூலை மாதத்திலும் காசி மாகாணத்தில் தலிபான்களால் குறைந்தது ஒன்பது ஹசரா ஆண்கள் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா மக்களில் பெரும்பான்மையாக இருக்கும் ஹசராக்கள் தலிபான்கள் மற்றும் அதன் போட்டிக் குழுவான ஐ.எஸ் குழுவினரால் அடிக்கடி தாக்குதலுக்கு இலக்காகின்றனர் என்பது குறிப்பித்தக்கது.

No comments:

Post a Comment